சீனாவில் இருந்து 15-ம் தேதி ரேபிட் கிட் கருவி இந்தியா வரும் என ஐசிஎம்ஆர் தகவல்: தமிழகத்துக்கு முன்னுரிமை வழங்கப்படுமா?

சென்னை: துரித பரிசோதனை கருவிகள் தமிழகம் வருவதற்கு மேலும் காலதாமதம் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய தற்போது பிசிஆர் எனப்படும் தொழில் நுட்ப முறையே பின்பற்றப்படுகிறது. இதன் மூலம் சோதனை முடிவுகளை அறிவதில் 24 மணி நேரத்திற்கும் அதிகமாக காலதாமதம் ஆவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. எனவே கொரோனா பாதித்தவர்களை உடனுக்குடன் பரிசோதனை செய்து முடிவுகளை அறிந்து கொள்வதற்காக ரேபிட் கிட் எனப்படும் துரித பரிசோதனை கருவிகளை பயன்படுத்த தமிழக அரசு முன்வந்தது. இதற்காக சீனாவில் நேரடியாக 4 லட்சம் ரேபிட் கிட் கருவிகளை பரிசோதனை செய்ய ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் கடந்த வாரம் செய்தியாளரை சந்தித்த போது தெரிவித்தார்.

இந்த துரித கருவிகள் அனைத்தும் கடந்த வியாழக்கிழமை அதாவது கடந்த 9-ம் தேதயே தமிழகத்திற்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு எதிர்பார்த்த தேதியில் கருவிகள் வரவில்லை. இது குறித்து தொடர்ந்து விசாரித்ததில் சீனாவில் உள்ள ஏற்றுமதியாளர் தமிழகத்திற்கு வரவேண்டிய துரித பரிசோதனை கருவிகளை அமெரிக்காவுக்கு அனுப்பியது தெரிய வந்தது. எனவே இது தவறுதலாக சாதாரணமாக நடைபெற்ற நிகழ்வா? அல்லது இதில் வேறு ஏதேனும் நடந்திருக்கிறதா? என்பது தொடர்பான சந்தேகத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. தமிழகம் மட்டுமல்லாமல் மத்திய அரசும், 5 லட்சம் ரேபிட் கிட் கருவிகளை சீனாவிடம் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தது; அதுவும் வரவில்லை. எனவே இந்த துரித பரிசோதனை கருவி அப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.

இந்த நிலையில் சற்று முன்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவர் இந்த ரேபிட் டெஸ்ட் கருவிகள் வரும் 15-ம் தேதி இந்தியாவுக்கு வரும் என்று தெரிவித்தார். சீனாவில் இருந்து வரும் 15-ம் தேதி இந்தியாவுக்கு வந்தால் அதை தொடர்ந்து தமிழகத்திற்கு எப்போது வரும் என்பதில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மேலும் காலதாமதம் ஏற்படவே வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தை பொறுத்தவரை மகாராஷ்டிராவுக்கு அடுத்த படியாக தமிழகத்தில் தான் இந்த கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு கொரோனா நிவாரண நிதியும் கிடைக்கவில்லை. வட மாநிலங்களுக்கே இதில் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே சீனாவில் இருந்து நேரடியாக மத்திய அரசுக்கு இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் வந்தால் அதில் தமிழகத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்த துரித பரிசோதனை கருவி தொடர்ந்து தமிழகத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் சுமார் 8 கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் கொரோனா தொற்று இருப்பவர்களை உடனுக்குடன் கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தினால் மட்டுமே அவர்களால் ஏற்படக்கூடிய இந்த சமூக பரவலை தடுக்க முடியும். அதற்க்கு இந்த துரித பரிசோதனை கருவிகள் வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே அந்த கருவிகள் எப்போது வரும்?, இந்த பரிசோதனை என்பது எப்போது முடுக்கிவிடப்படும்?,இது போன்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

Related Stories: