உலகை அச்சுறுத்தும் வைரசுடன் மரண யுத்த போராட்டம்..:கொரோனாவின் வீரியத்தை அறியாமல் உலா வரும் மக்கள்: டெல்டாவில் ஒருவர் பலி 86 பேருக்கு தொற்று உறுதி

* போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் புள்ளிங்கோ, காதல் ஜோடிகள்

* 15,000 வழக்குகள், 17,000 பேர் கைது செய்யப்பட்டும் ஊரடங்கவில்லை

கொரோனா பாதித்த நாடுகளில் இருந்து வந்த பயணிகளும் மற்றும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை இன்னும் தமிழகத்தில் எட்டவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறி வருகிறார். இருப்பினும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக, டெல்டா மாவட்டத்தை பொறுத்தவரை திருச்சி-30, கரூர்-23, திருவாரூர்-12, நாகப்பட்டினம்-11, தஞ்சாவூர்-8, அரியலூர் மற்றும் பெரம்பலூரில் தலா ஒருவர் என மொத்தம் 86 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் திருச்சி-13, தஞ்சாவூர்-3, அரியலூர்-1 என 17 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்கள்.இதுதவிர, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் சிகிச்சை பெற்று வந்த 57 வயது பெண் ஒருவர் நேற்று காலை உயிரிழந்தார். அவருக்கு ரத்த மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. உயிரிழந்த பெண் கடந்த 20ம் தேதி திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் சென்றுள்ளார். அதன்பின்னர்தான் அவர் மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் அவதிப்பட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

உயிரிழந்த பெண் திருச்சியில் எவ்வளவு நாள் தங்கி இருந்தார், எங்கு எங்கு சென்றார், எதற்காக இங்கு வந்தார், யார் யாருடன் தங்கி இருந்தார் என போலீசார் மற்றும் சுகாதாரத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், அவர் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டதால், ரயில் நிலையத்திற்கு எப்படி வந்தார், அவருடன் யார் வந்தார்கள் என அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதனடிப்படையில், உயிரிழந்த பெண்ணுடன் பழகிய அனைவரையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 144 தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் தவிர யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியும், கொடிய வைரஸ் கொடூரத்தை உணராத பெரும்பாலான மக்கள் ஜாலியாக வீதிகளில் உலா வருகின்றனர். டூவீலர்களில் ஒருவருக்கு மேல் செல்லக்கூடாது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், அப்படினா என்ன என்று கேட்க அளவுக்குதான் மக்களின் செயல்பாடுகள் உள்ளது.

அத்தியாவசிய கடைகளின் நேர கட்டுப்பாடு அமலுக்கு வந்தும் மக்களிடம் வைரசின் வீரியம் தெரியவில்லை. காய்கறி மற்றும் மளிகை கடைக்கு செல்லும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நிற்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இறைச்சி கடைகளை மூட உத்தரவிட்டாலும் தடையை மீறி வியாபாரிகள் கடையை திறக்கின்றனர். ஒரு சிலர் ஒரு படி மேலே சென்று அரை கிலோ, கால் கிலோ என பாக்கெட் போட்டு தெரு தெருவாக சென்று சப்ளை செய்கின்றனர். சென்னை, மதுரை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 15ம் தேதி வரை இறைச்சி கடைகளை மூட மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆனால், டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூரில் இறைச்சி கடைகளை வரும் 15ம் தேதி வரை மூடுவதற்கான எந்த உத்தரவும் போடவில்லை.மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசு நிர்வாகமே உத்தரவை காற்றில் பறக்க விடுகிறது. நேற்று திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களை மூட்டைகளை அடைத்து செல்வதுபோல், பொருட்களை ஏற்றி வந்த லாரிகளிலேயே பணிக்கு அழைத்து சென்றனர். இதேபோல், கார்களில் சமூக இடைவெளி விட்டுதான் அமர்ந்து செல்ல வேண்டும், இருசக்கர வாகனங்களில் ஒருவருக்கு மேல் செல்லக்கூடாது என்று வாகனங்களை மறித்து அறிவுரை கூறும் போலீசாரே அதை மதிப்பதில்லை.

மாறாக போலீஸ் ஜீப், கார்கள் மற்றும் பைக்குகள் சமூக இடைவெளி இல்லாமல் தான் செல்கின்றன. பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் அரசு வாகனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பது இல்லை. குறிப்பாக, ஆம்புலன்ஸ் ஊழியர்கள், துப்புரவு ஊழியர்களுக்கு முக கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு கவசங்கள் வழங்குவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசு நிர்வாகமே இப்படி இருந்தால் மக்கள் எப்படி உத்தரவுகளை பின்பற்றுவார்கள்.திருச்சி, தஞ்சை, திரூவாரூர், நாகை, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன. அவ்வாறு வரும் மக்களை போலீசார் அறிவுரை கூறி எச்சரித்து அனுப்புகின்றனர். இருப்பினும், போலீஸ் சோதனைச்சாவடிகள் எங்கு எங்குள்ளது என தெரிந்து கொள்ளும் இளசுகள் (புள்ளிங்கோஸ்) அவர்களுக்கு டிமிக்கி கொடுத்து வேறு ஏதாவது குறுக்கு வழியிலும் அல்லது சோதனைச்சாவடிக்கு மறுப்பக்கம் சாலையில் (ராங்க் வே) பறக்கின்றனர்.

இது இருபக்கம் என்றால் தற்போது காதல் ஜோடிகளும் பைக்கில் உலா வருகின்றனர். வெறிச்சோடி கிடக்கும் சாலையில் அதிக வேகமாக காதலன் பைக் ஓட்டுவதும், பின்னால் அமர்ந்திருக்கும் காதலி உற்சாகத்தில் வீடியோ மற்றும் செல்பி எடுப்பதும் வேடிக்கையாக உள்ளது. சிலரோ சாலையில் படுத்தும் விதவிதமாக போட்டோ ஷூட் எடுக்கின்றனர். இதுகுறித்து, யாராவது அறிவுரை கூறினால், இதுபோன்று மீண்டும் ஒரு வாய்ப்பு எப்போது வரும் என்று பதில் கேள்வி கேட்கின்றனர்.நேற்று திருச்சியில் வழக்கம் போல் இருசக்கர வாகனங்களில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் உலா வந்தனர். மாரீஸ் மேம்பாலம் அருகே ஒரே மொபட்டில் வந்த 2 பேரை மடக்கி பிடித்த போலீசார் எதற்காக வெளியே வந்தீர்கள் என கேட்ட போது, லேப்டாப் சர்வீசுக்கு கொடுத்திருந்தேன், அதனை வாங்க சென்றேன் என கூலாக பதில் கூறியதை கேட்ட போலீசார் கிறுகிறுத்து போகினர்.உங்களுக்காக தான் நாங்கள் இரவு பகல் என மாறிமாறி பணி செய்கிறோம். இப்படி பொறுப்பில்லாமல் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வந்தால் என்ன செய்வது என கேட்டு வழக்கு பதிந்தனர். இதேபோல், டெல்டாவில் உள்ள மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் முககவசத்தை பயன்படுத்தாமல் செல்போனில் பேசியபடியும் வீரசாகசம் செய்தும் வாகன ஓட்டிகள் சென்றதால் முறையாக ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் (திருச்சி, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர்) நேற்று வரை 144 தடை உத்தரவை மீறி வெளியே உலா வந்த 14,828 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 16,788 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12,587 பைக்குகள், 236 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஒரு கொடிய வைரசுடன் உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் மரண யுத்த போராட்டம் நடத்தி வரும் நிலையில், தமிழகத்தில் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல் ஹாயாக வெளியில் நடமாடுவது வேதனையாக உள்ளது. வைரசிடம் இருந்து மக்கள் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள், காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் அயாரத பாடுபட்டு வருகின்றனர். இதேபோல், கொரோனாவின் வீரியம், அதன் கொடூர பாதிப்புகள், மரண போராட்டங்கள் என தினமும் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இனி வரும் காலங்களில் தான் கொரோனாவில் பாதிப்பு கடுமையாக இருக்கும் என எச்சரித்துள்ளனர். இருப்பினும் மக்கள் மட்டும் வீட்டில் ஓயவில்லை. ஓய்வு இல்லாமல் மேற்கண்ட துறையை சேர்ந்த அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களது குடும்பங்களை மறந்து உயிரை பொருட்படுத்தாமல் மகத்தான சேவையாற்றி வருவதை மனதில் வைத்து பொதுமக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி தனிமைப்படுத்தி கொண்டால் கொரோனாவை விரட்டும் காலம் வெகு தொலைவில் இல்லை. வீட்டில் முடங்குவோம்... தனிமைப்படுத்துவோம்... கொரோனாவை வெல்வோம்...

கள்ளச்சந்தை விற்பனையும்...கலகலக்கும் குடிமகன்களும்...

நாடு முழுவதும் கடந்த 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளதால், அனைத்து டாஸ்மாக் கடை மற்றும் பார்கள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு அமலில் வருவதற்கு முன்பே டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், அன்றைய தினம் டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. பெட்டி பெட்டியாக சரக்குகளை வாங்கி சென்று வீடுகளில் அடுக்கினர். பலர் கள்ளச்சந்தையில் விற்க லட்சக்கணக்கில் முதல் போட்டு மதுபாட்டில்களை வாங்கி சென்று பல மடங்கு அதிக விலைக்கு விற்றனர். டெல்டா மாவட்டங்களில் கள்ளச்சந்தை விற்பனை அமோகமாக நடந்தது.பெரும்பாலான இடங்களில் ஆளும்கட்சியினரின் பார்களில் மது விற்பனை களைக்கட்டுகிறது. இதற்கு சில காக்கிகளும் துணை நின்று வைட்டமின் ‘ப’ வாங்கி கொள்கின்றனர். பல இடங்களில் டாஸ்மாக்கில் பணியாற்றும் ஊழியர்கள், விற்பனையாளர்கள், சூபர்வைசர்கள் கடை திறந்து மதுபாட்டில்களை எடுத்து கள்ளச்சந்தையில் விற்கின்றனர். இது இல்லாமல் கள்ளச்சாராயம், கள் விற்பனையும் ஜோராக நடக்கிறது.

தற்போது வாங்கி வைத்த ஸ்டாக் விற்று தீர்ந்துள்ளதால் குடிமகன்கள் மதுபாட்டில்கள் கிடைக்காமல் பைக் மற்றும் கார்களில் உலா வருகின்றனர். விரக்தியின் உச்சத்திற்கு சென்று பல்வேறு கலப்பட பொருட்களை அருந்தி உயிரை மாய்த்து கொள்கின்றனர். சிலரோ கடையை உடைந்து மதுபாட்டில்களை திருடி செல்கின்றனர். கடைகளில் கொள்ளை போவதை தடுக்க மதுபாட்டில்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடும் அரசு, குடிமகள்களின் தற்கொலைகளை தடுக்க மனநல ஆலோசனை வழங்க முன்வர வேண்டும் என்பதே குடும்ப பெண்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

>