காட்பாடியை சேர்ந்தவர் லண்டன் சென்று திரும்பிய பாதிரியாருக்கு கொரோனா: சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை

வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடி பர்னீஸ்புரத்தைச் சேர்ந்த பாதிரியார் லண்டன் சென்று கடந்த 17ம் தேதி வீடு திரும்பியுள்ளார். அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் சுமார் 600 பேர் வரை வெளிநாட்டிற்கு சென்று திரும்பி உள்ளனர். இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.இந்நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பர்னீஸ்புரத்தில் உள்ள பாதிரியார் லண்டன் சென்றுவிட்டு கடந்த 17ம் தேதி காட்பாடி திரும்பி வந்துள்ளார். அவரை மாவட்ட  நிர்வாகத்தினர் தனிமைப்படுத்தி கண்காணித்தனர். அவருக்கு காய்ச்சல் அதிகரித்துள்ளதால் கடந்த 24ம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரது மனைவியும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரிகள் கூறுகையில், ‘காட்பாடி பர்னீஸ்புரத்தில் உள்ள பாதிரியார் கடந்த 17ம் தேதி லண்டனில் இருந்து திரும்பியுள்ளார். சென்னை ஏர்போர்ட்டில் மருத்துவக்குழுவினர் அவருக்கு பரிசோதனை செய்தனர். ஆனால் எவ்வித காய்ச்சல் அறிகுறியும் இல்லை என்று தெரியவந்துள்ளது.  இதையடுத்து வீடு திரும்பியுள்ளார். பின்னர் அவருக்கு கடந்த 24ம் தேதி அதிகளவில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது’ என்றார். ஏற்கனவே ஆற்காடு அடுத்த கீழ்விஷாரத்தில் துபாய் சென்று திரும்பிய 26 வயது வாலிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: