பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் தமிழகத்தில் குறிப்பிட்ட 5 பேருக்கு மட்டுமே டெண்டர் வழங்கப்படுகிறது: திமுக குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறைகளில் குறிப்பிட்ட 5 பேருக்கு மட்டுமே டெண்டர் வழங்குவதாக திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டினார். திருச்சுழி தங்கம் தென்னரசு (திமுக): தமிழகத்தில் 4 அல்லது 5 கான்ட்ராக்டர்கள்தான் இருக்கிறார்கள். அவர்களை தாண்டி யாரும் வருவதில்லை. விருதுநகரா நீ, பொள்ளாச்சியா நீ, வடசென்னை உனக்கு, தென்சென்னை எனக்கு என்று கூறும் நிலை உள்ளது. முதல்வர் எடப்பாடி: மீண்டும் மீண்டும் சொல்கிறேன், இது ஐந்து ஆண்டு கால ஒப்பந்தம். இது ஒரு ஆண்டில் நிறைவு பெறுவது கிடையாது. ஐந்து ஆண்டு காலத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டு ஐந்து ஆண்டு காலம் அவர் அந்த பணியை செய்ய வேண்டும். அதற்கான நிதி இருந்தால்தான் அந்த ஒப்பந்தத்தை எடுத்து பணி செய்ய முடியும்.

அந்த திட்டத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் நீங்கள் சொல்லலாம். சாலை அமைத்ததில் குறைபாடு இருந்தால் சொல்லலாம். தங்கம் தென்னரசு: திமுக ஆட்சியில் நிலம் கையகப்படுத்தாமல் திட்டங்கள் தொடங்கப்பட்டதாக முதல்வர் அடிக்கடி சொல்வார். ராஜபாளையம் பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பாக கடந்த 2018ம் ஆண்டு மேம்பாலம் கட்ட அரசு உத்தரவு போட்டது. தற்போது 30 சதவீத பணிகள் மட்டுமே நடந்துள்ளது. நிலம் கையகப்படுத்தாததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நிலம் கையகப்படுத்தினால் அதற்கு எவ்வளவு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று கூட முடிவு செய்யவில்லை.

முதல்வர் எடப்பாடி: கடந்த திமுக மற்றும் அதற்கு முந்தைய அதிமுக ஆட்சியிலும் இந்த நிலைமை இருந்தது. இந்த சிக்கலை தீர்க்கத்தான் முதல்கட்டமாக நிலத்தை கையகப்படுத்திய பிறகு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஆனாலும் 80 சதவீதம் நிலம் எடுத்த பிறகு பணிகளை தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு: குடிமராமத்து நாயகன் என்று முதல்வரை அழைக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் என்னென்ன பணிகள், எத்தனை கோடியில் செய்யப்படுகிறது என்ற ஒரு தகவலும் இல்லை. எந்த மாவட்டத்தில் எந்த ஏரிகள், குடிமராமத்து செய்யப்படுகிறது என்று சட்டமன்ற உறுப்பினருக்குகூட தெரியவில்லை.

முதல்வர் எடப்பாடி: உறுப்பினர் தொகுதி பக்கம் போயிருக்க மாட்டார்போல தெரிகிறது. இது மிக பெரிய திட்டம். தமிழகத்தில் 14 ஆயிரம் ஏரிகள் குடிமராமத்து பணிகள் மூலம் தூர்வாரப்பட்டு மழைநீரை சேமிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் பொதுப்பணித் துறையின் மூலமாக பராமரிக்கப்படுகின்ற ஏரிகளில் 4865 பணிகள் 930.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளன. தங்கம் தென்னரசு: தொகுதி பக்கம் போன காரணத்தினால்தான் 4வது முறையாக எம்எல்ஏவாக இங்கு வந்து உட்கார்ந்து இருக்கிறேன். (இந்த பிரச்னை தொடர்பாக தொடர்ந்து தங்கம் தென்னரசு பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது). இவ்வாறு விவாதம் நடந்தது.

* திமுக ஆட்சி மலரும்போது பேரவை அலங்காரமாகும்

தங்கம் தென்னரசு விவாதத்தில் பங்கேற்று பேசி முடிக்கும்போது, “ஒவ்வொரு ஆண்டும் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கை மீது சட்டப்பேரவையில் விவாதம் நடைபெறும்போது பூ அலங்காரம் செய்யப்பட்டு மிகுந்த கலைநயத்துடன் சட்டப்பேரவை வளாகம் காணப்படும். ஆனால் இந்த ஆண்டு கலையிழந்த மாடமாக, நரம்பில்லாத வீணையாக காட்சி அளிக்கிறது. விரைவில் திமுக ஆட்சி மலரும். அப்போது மீண்டும் அலங்காரமாக இந்த பேரவை இருக்கும்” என்றார்.

இதற்கு பதில் அளித்த முதல்வர், “கொரோனா வைரஸ் காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்படவில்லை” என்றார்.

Related Stories: