முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த எதிர்ப்பு: கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வலியுறுத்தல்

மன்னார்குடி: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் முதல்வர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோட்டூரில் ஓஎன்ஜிசி புதிய பிளான்ட் முன்பு  விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே புழுதிக்குடி ஊராட்சி சோழங்கநல்லூர் கிராமத்தில்  கடந்தாண்டு ஜூலை மாதம் 7ம் தேதி ஓஎன்ஜிசி சார்பில் புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணிகள் தொடங்கின. அப்போது அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் மக்களின் எதிர்ப்பையும் மீறி பணிகள் நடந்தன. இந்நிலையில் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதல்வர் பழனிசாமி கடந்த மாதம் அறிவித்து சட்டமசோதாவை நிறைவேற்றினார்.

இதற்காக, முதல்வருக்கு டெல்டா விவசாயிகள் சார்பில் பாராட்டுவிழா நேற்று திருவாரூரில் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை முற்றிலும் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சோழங்கநல்லூர் கிராமத்தில்  புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஓஎன்ஜிசி புதிய பிளான்ட் முன்பு ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்பாலன் தலைமையில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தையொட்டி கோட்டூர் போலீசார் சோழங்கநல்லூர் கிராமத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: