மலை ரயில் பயணம்

நன்றி குங்குமம் முத்தாரம்

அழகு என்றாலே மலைத்தொடர்கள் நம் நினைவுக்கு வராமல் இருக்காது. அதுவும் நீண்ட மலைத்தொடர்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படியான அழகு மலைத் தொடர்தான் ராக்கி. சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் நீண்டு செல்லும் இந்த மலைத்தொடர் வட அமெரிக்காவின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. 5.5 கோடி முதல் 8 கோடி ஆண்டு களுக்கு முன்பு இந்த மலைத்தொடர் உருவாகியிருக்கலாம். இதுபோக ஆண்டெஸ் என்ற மலைத்தொடர் தென் அமெரிக்காவின் 6 நாடுகள் வழியாகச் செல்கிறது. சதர்ன் கிரேட் எஸ்கார்ப்மென்ட், டிரான்சான்டரிக், ஹிமாலயா போன்றவை உலகின் குறிப்பிடத்தக்க நீண்ட மலைத்தொடர்கள். கனடாவில் உள்ள ராக்கி மலைத்தொடரை ரசிக்க ஏதுவாய் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட்டுள்ளனர். ஒரு ரயில் வான்கோவர் நகரிலிருந்து ஜஷ்பர் நகருக்குச் செல்கிறது.

மற்றொன்று பான் கோவரிலிருந்து ஏரி லூசியாவுக்கு, பான்டிப்புக்குச் செல்கிறது. இதில் வெற்றி பயணம், தங்க பயணம் என இரண்டு வித பயணங்கள் உண்டு. தங்க பயணம் கூடுதல் சொகுசு பயணம்! அதனால் கட்டணமும் 1000 டாலருக்கு மேல் கூடுதல்! அடிப்படை கட்டணம் 2500 டாலர். இந்தப் பயணங்களில் 5 தேசிய பூங்காக்கள், நதி, பள்ளத்தாக்குகள், அபூர்வ மலைத்தொடர் அமைப்புகள், மழைக்காடுகள், பனியால் மூடியிருக்கும் சிகரங்கள், ஐஸ்கட்டி வயல்கள், நதி லூயசி (தண்ணீரில் பார்த் தால் கண்ணாடி போல் நம் முகம் பளிச்சென தெரியும்) இவற்றை பார்த்து ரசிக்கலாம். கனடாவிலேயே மிகப்பெரிய தேசிய பூங்கா, ஜஷ்பர் தேசிய பூங்கா. அங்கு அபூர்வ மரங்களைத் தரிசிக்கலாம். வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த ரயில் பயணத்தை அனுபவித்துவிட வேண்டும் என்று இதில் பயணித்தவர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

தொகுப்பு: ராஜிராதா

Related Stories: