‘கோடையை இதமாக்க இயற்கையின் கொடைகள் இருக்கு’ அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த சீரான உணவுகளை எடுப்பது அவசியம்

நீர் பானங்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கடைபிடித்து சுட்டெரிக்கும் வெயிலின் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று கோடை கால பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து சித்த மருத்துவர் மீனாகுமரி தெரிவித்தார். தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் டாக்டர் மீனாகுமாரி கூறியதாவது: கோடைகாலம் ஆரம்பிக்கிறது என்றால், நாம் இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

ஒன்று உடலின் அதிகப்படியான உஷ்ணத்தை குறைக்கும் வழிமுறை, மற்றொன்று உடலில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்யும் முறை. பெரும்பாலும் இந்த இரு காரணங்களால் தான் உடலின் நுண்சத்துகளும், நீர்சத்துக்களும் குறைகின்றன. வெயிலில் இருந்து நம்மை பாதுகாக்க ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சீரான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை. சுக்குடன் தேவையான அளவு நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் சிறிதளவு பனைவெல்லம் சேர்த்து தேநீர் போல் அருந்தலாம். அகத்தில் உள்ள அக்னியை சீர்செய்யும் சீரகத்தை தேநீர் செய்து பருகினால் உடலின் உஷ்ணம் குறைவதோடு, வயிறு மந்தம் நீங்கி, உடல் பலப்படுகிறது. அதேபோன்று புதினா, கொத்துமல்லி போன்றவற்றையும் தனித்தனியே முறையாக தேநீர் செய்து பருகினால் உடல் வெப்பம் தணிவதோடு சிறந்த நோய்த் தடுப்பு காரணியாகவும் செயல்படும்.

சர்பத் போன்று குடிக்க நினைப்பவர்கள் பன்னீர் ரோஜா இதழ் 100 கிராமினை பாத்திரத்திலிட்டு 250 மிலி நீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அதில் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, பனைவெல்லம், சப்ஜாவிதை சேர்த்து பருக வேண்டும். அவ்வாறு பருகினால் உடலின் நீரிழப்பை தடுப்பதோடு, செரிமானத்தை சீர்செய்து, அடிவயிற்றில் ஏற்படும் வலியையும் பிடிப்பையும் குறைக்கும். நன்னாரி, வெட்டிவேர், செம்பருத்தி இதழ் முதலியவற்றையும் தனித்தனியே சர்பத் செய்து அருந்தலாம்.

இயற்கை தந்த கொடைகளில் இளநீரும், கற்றாழையும் கோடைகால பாதிப்பான உடல் உஷ்ணம், வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆகியவற்றை போக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவற்றில் விட்டமின்களும், தாது உப்புக்களும் உடலுக்கு தேவையான அளவில் இருப்பதால் உடலின் நீரிழப்பை தடுப்பதோடு, மனதிற்கு உற்சாகத்தை தருகிறது. கோடையின் வெப்பத்தை தாங்கி நிற்கும் பனையிலிருந்து கிடைக்கும் நுங்குடன் பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீரை சேர்த்து பருக உடலின் சூடு தணிந்து உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும்.

கற்றாழையின் மேல் தோலை நீக்கி, உள்ளிருக்கும் சோற்றுப் பகுதியை குழகுழப்பு நீங்கும் வரை சுத்தமான நீரில் அலசிய பின் அரைத்து சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு, தேன், தேவையான அளவு நீர் சேர்த்து அருந்தலாம். நெல்லிக்கனியின் விதையை நீக்கி சிறிது நீர் சேர்த்து விழுதாக அரைத்து, அதனுடன் தேவையான அளவு தேன் அல்லது நாட்டு சர்க்கரை, உப்பு, நீர் சேர்த்து அருந்த, உடலின் அடிப்படை தத்துவமான உயிர் தாதுக்களை (வாதம், பித்தம் கபம்) சமநிலையில் வைத்திருப்பதோடு கோடை காலத்தில் உடலில் மிகுதிப்படும் வெப்பத்தைத் தன்னிலைப்படுத்தி மனதிற்கும் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

மண்பானையில் நீருடன் வெட்டிவேர் சேர்த்து ஊறல் நீராக அருந்தலாம். இதேபோன்று நெல்லிக்கனி, தேற்றான்விதை, சீரகம் இவற்றையும் தனித்தனையே முறையாக ஊறல் நீர் செய்து அருந்தலாம். வேம்பின் மலர்களை நீரிலிட்டு ஊறவைத்து ஊறல்நீராக பருக உடலின் சூட்டை தணிப்பதோடு, தாகத்தை தணித்து நாவறட்சியை போக்கும். மேலும் வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து உண்ண கோடை காலத்தில் பரவும் அம்மை போன்ற வைரஸ் தொற்று நோய்கள் வராமல் நம்மை பாதுகாப்பதோடு நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பதிமுகம் மற்றும் செம்மரம் இவற்றின் பட்டைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து, நீர் இளஞ்சிவப்பு நிறமானதும் வடிகட்டி ஆறவைத்து அருந்த கிருமிகளால் உண்டாக்ககூடிய மூத்திர உபாதைகளை தடுத்து, தேவையற்ற கழிவுகளை வெளியேற்றி உடலுக்கு பொலிவை தருகிறது. எலுமிச்சை பழச்சாற்றுடன் தேவையான அளவு நீர் சேர்த்து, சிறிதளவு புளி, சுக்கு, ஏலக்காய், பனைவெல்லம் சேர்த்து அருந்த, வெப்ப காலத்தில் உண்டாகும் அதிக தாகத்தை போக்கி, உப்புச்சத்துக்களை சமன் படுத்தி நீரிழப்பை தடுக்கிறது.

வடித்த சோற்றில் இரவு நீர் ஊற்றிவைத்து மறுநாள் காலை அதனுடன் சிறிது மோர், சின்னவெங்காயம் சேர்த்து உண்பதே நம் முன்னோர்கள் காட்டிய சிறந்த வழக்கமாகும். இதில் குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்தை சீர்செய்வதோடு மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. உடலின் ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.

தர்பூசணி பழத்தில் 90 சதவீதம் நீர் சத்தும் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்திருப்பதால் உடலின் நீரின் அளவை குறையாமல் தடுப்பதோடு குடல் சீராக இயங்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை சீர் செய்து சிறுநீர் கற்கள் உண்டாகாமல் தடுக்கிறது. சூரிய வெப்பத்தால் தோல் சேதப்படாமல் பாதுகாக்கிறது. முலாம் பழம், சாத்துக்குடி, வெள்ளரிப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சம்பழம், தர்பூசணி முதலியவை கோடை காலத்திற்கு உரிய பழங்களாகும்.

இப்பழங்களை பழமாகவோ பழச்சாறாகவோ அருந்த உடலில் நீரின் அளவு சமன்படுவதோடு பெருங்குடல் சீராக இயங்குகிறது. முலாம் பழத்தினால், அதிக தாகம் தணியும், நீர் எரிச்சல் நீங்கும், பெண்களுக்கு உண்டாகும் வெள்ளை படுத்தலுக்கு சிறந்தது. வெள்ளரிப் பழத்தினால், உடல் வெப்பம் குறையும், நாவறட்சி நீங்கும், எலுமிச்சை பழத்தினால், வெப்பத்தினால் உடலில் அதிகரித்த பித்தம் தணியும்.

மோர் உடல் வறட்சியை தடுப்பதோடு நீர்க்கடுப்பு, எரிச்சல் போன்ற சிறுநீர் நோய்களை போக்குகிறது. குடலுக்கு நன்மை பயக்கின்ற பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளதால் செரிமானத்தை சீர் செய்து குடலை பலப்படுத்துவதோடு வயிற்று வலி, வயிற்றுப்புண் முதலியவற்றை குணப்படுத்தும். இது கோடை காலத்துக்கான இதமான பானமாகும்.

வெள்ளைப் பூசணி, சிவப்பு பூசணியில் அதிகளவு நீர்சத்து இருப்பதோடு, வைட்டமின் பி, சி, கால்சியம், இரும்புசத்து, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் மிகுந்துள்ளதால் இதனை கூட்டாகவோ, பழரசமாகவோ செய்து பருக உடலின் வெப்பத்தை குறைத்து, நீரிழப்பை தடுத்து, நீர்க்கட்டு, நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் போன்ற சிறுநீர் கோளாறுகளையும் சீர்செய்வதோடு பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதலையும் குணமாக்குகிறது.

வெள்ளரி பிஞ்சினை, மிளகு மற்றும் மோர் சேர்த்து பச்சடியாக செய்து உண்ண உடலின் உஷ்ணத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை காக்கிறது. சுரைக்காயை கூட்டாக உண்ண, ரத்த அழுத்தம் சீராவதோடு இதயத்திற்கு நல்ல பலம் உண்டாகும். சுரைக்காயில் அதிகளவு நீர்ச்சத்து நிரம்பியுள்ளது. இதனால், நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளவும், போதுமான நீர்ச்சத்து வழங்கி புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் உதவிகரமாக இருக்கிறது.

வைட்டமின் சத்துக்கள், நீர்ச்சத்து, நார்ச்சத்து போன்றவை சுரைக்காயில் உள்ளன. சுரைக்காயை சாம்பார், கூட்டு போன்ற உணவாக எடுத்துக் கொள்ளலாம். சில சமயம், ஜூஸ், சூப் போலவும் எடுத்துக் கொள்ளலாம். வாழைத் தண்டிற்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. மேற்கூறிய நீர் பானங்கள் மற்றும் உணவுகளை கடைபிடித்து சுட்டெரிக்கும் வெயிலினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம். மரம் வளர்ப்போம், கோடையை எதிர்கொள்வோம், சித்தம் கூறும் உணவுகளை உண்போம், ஆரோக்கியத்தை காப்போம். இவ்வாறு தேசிய சித்த மருத்துவ இயக்குநர் டாக்டர் மீனாகுமரி கூறினார்.

* பழைய கஞ்சி
கோடை காலத்தில் பசித்தன்மை குறைந்து காணப்படும். அதனால் சிறியவர் முதல் முதியவர் வரை உண்ண தகுந்த உணவு கஞ்சியாகும். ஏனெனில், கஞ்சியானது குடலில் எளிதில் உறிஞ்சப்பட்டு விரைவில் செரிக்கும் தன்மையும், நீரிழப்பை தடுக்கும் தன்மையும் கொண்டது. நவரை அரிசியை தேவையான அளவு நீர் சேர்த்து வேக வைத்து பின் சிறிதளவு பால் மற்றும் பனைவெல்லம் சேர்த்து அருந்தலாம். பச்சைப்பயிறு, கோதுமை, கொள்ளு, கருப்பு உளுந்து, கடலை பருப்பு, துவரம் பருப்பு அரிசி, எள்ளு, மொச்சை சம அளவு எடுத்து பொடி செய்து நீரிலிட்டு வேக வைத்து பின் சிறிதளவு பால் மற்றும் பனை வெல்லம் சேர்த்து கஞ்சியாக அருந்தலாம்.

கூழானது குடலுக்கு நன்மை பயக்கும் நுண் கிருமிகளை நன்னிலைப்படுத்தி குடற்புண், கழிச்சல், செரியாமை போன்ற உபாதைகள் உண்டாகாமல் தடுக்கிறது. கேழ்வரகு மாவுடன் தேவையான அளவு நீர் சேர்த்து ஒரு நாள் இரவு புளிக்க வைத்து பின் கூழாக காய்ச்சி தேவையான அளவு மோர், சின்ன வெங்காயம் சேர்த்து கரைத்து பருகலாம்.

* கீரைகளில் நார்த்துக்கள்
கீரைகளில் நார்ச்சத்துக்கள் நுண் தாதுக்கள் நிறைந்திருப்பதால் எளிதில் மலத்தினை வெளியேற்றுகிறது. மேலும் விட்டமின் சத்துக்களும், கால்சியம் பொட்டாசியம் போன்ற உப்புச் சத்துகளும் மிகுந்து காணப்படுவதால் வாய் முதல் ஆசனவாய் வரை உள்ள செரிமான உறுப்புகளில் ஏற்படுகின்ற கோளாறுகளான வாய்ப்புண், குடற்புண், செரியாமை, மலக்கட்டு மூலம் ஆசனவாய் வெடிப்பு முதலியவை ஏற்படாமல் தடுத்து உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது.

மணத்தக்காளி கீரையுடன் சிறு பருப்பு, சின்ன வெங்காயம், மிளகு சேர்த்து வேகவைத்து நெய் சேர்த்து தாளித்து கூட்டாக செய்து உண்ணலாம். இதேபோன்று பருப்பு கீரை முளைக்கீரை, பசலைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி கீரை ஆகியவற்றையும் கூட்டாக செய்து உண்ணலாம். சிறுகீரையினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடலின் உஷ்ணம் குறைந்து சிறுநீர் நன்றாக வெளியாகும்.

The post ‘கோடையை இதமாக்க இயற்கையின் கொடைகள் இருக்கு’ அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்த சீரான உணவுகளை எடுப்பது அவசியம் appeared first on Dinakaran.

Related Stories: