சதம் அடிக்கும் வெயிலையும் சமாளிக்கலாமாம்… மதுபிரியர்கள் நாடும் குளுகுளு பீர் வகைகள்: இயல்பை விட 40 சதவீதம் வரை விற்பனை அதிகரிப்பு; அளவு மீற வேண்டாமென மருத்துவர்கள் எச்சரிக்கை

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை மார்ச் மாதம் முதலே கடும் கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. இது படிப்படியாக அதிகரித்து 22க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் தினமும் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். கோடை வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பொதுமக்கள் பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகின்றனர்.

சென்னையில் வரலாறு காணாத அளவு மழை பெய்தபோது கூட சாலையின் நடுவே சுவர்களில் வைத்து மது அருந்திய சென்னைவாசிகள் இந்த வெயிலை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? எப்போதும் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதனை சற்று மாற்றி யோசிக்கும் மது பிரியர்கள், கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க பீர் வகைகளை அதிகம் விரும்பி அருந்த தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, சராசரியை விட பீர்களின் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மது பிரியர்கள் விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகளை விட கூலிங் பீர் வகைகளை அதிகம் குடிக்க தொடங்கியுள்ளனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பெரும்பாலானோர் பீர் வகைகளை கேட்டு வாங்குகின்றனர். இதனால் தட்டுப்பாடின்றி சூப்பர் ஸ்டிராங் பீர், பிரீமியம் பீர், லேகர் பீர் என பல்வேறு வகைகளில் பீர் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சாதாரண நாட்களில் ஒரு லட்சம் பெட்டி கொண்ட பீர்பாட்டில்கள் விற்பனையாகும். ஆனால் இப்போது ஒரு லட்சத்து 40 ஆயிரம் பெட்டிகள் வரை விற்பனை ஆகிறது. 40 சதவீதம் வரை பீர் வகைகள் விற்பனை அதிகமாகியுள்ளதால் கூடுதலாக பீர் பாட்டில்கள் டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இது இம்மாதத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மதுபான தொழிற்சாலைகளில் பீர் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஒரு காலகட்டத்தில் பீர் என்பது ஆல்கஹால் கிடையாது என சிலரால் விளம்பரப்படுத்தப்பட்டது. சினிமாக்களிலும் சாதாரணமாக வீடுகளில் உள்ளவர்கள் பீர் அருந்தும் காட்சிகளை வைத்தனர். இதனால் சரக்கு அடித்தால்தான் தவறு, பீர் குடித்தால் தவறு இல்லை என சொல்லும் வகையில் கல்யாணம், காதுகுத்து என எந்த நிகழ்ச்சிகள் நடந்தாலும் அதில் பீர் வகைகளும் கண்டிப்பாக தற்போது இடம் பெறுகின்றன. பீர் என்ற மதுபானத்துக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. உலகில் தண்ணீர், தேநீர் இதற்கு அடுத்தபடியாக அதிகமாக உட்கொள்ளப்படும் திரவங்களில் பீரும் ஒன்று என ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

கோதுமை, சோளம், அரிசி மற்றும் சில பொருட்களை நன்றாக கொதி கலன்களில் கொதிக்க வைத்து நன்கு பதப்படுத்தி பீர் வகைகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் சுவைக்காக ஒப்பூக்கல் எனப்படும் பூக்களில் இருந்து இந்த பீர் வகைகளை தயாரிக்கின்றனர். ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ற வகையில் பீர் வகைகளும் அதன் சுவைகளும் மாறுபடும். பீர் தயாரிக்கும் இடத்தில் எடுக்கப்படும் தண்ணீரின் சுவையைப் பொறுத்து சில இடங்களில் சுவை அமைகிறது. அதில் சேர்க்கப்படும் தானியங்கள் மற்றும் மூலப் பொருட்களின் தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு பிராண்டுகளுக்கும் ஒவ்வொரு சுவை என பல சுவைகளில் பீர் தயாரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப பீர்களில் ஆல்கஹால் அளவு மாறுபடுகிறது. ஒரு சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை பீர்களில் ஆல்கஹால் உள்ளது. நம்ம ஊரில் கிடைக்கும் பீர்களில் பொதுவாக 4 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை ஆல்கஹால் உள்ளது. பீர் வகைகளை முதன்முதலில் யார் கண்டுபிடித்தார் என்பதற்கு தெளிவான வரையறை கிடையாது. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தியர்கள் இதை உருவாக்கி இருக்கலாம் என சில குறிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. அந்த நாட்டிலிருந்து பீர் குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பீர் கலாச்சாரம் பரவி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. நல்ல விஷயங்கள் மனிதர்களை சென்றடைய நீண்ட நாட்கள் ஆகும். ஆனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என தெரிந்தும் சில விஷயங்கள் மனிதர்களை எளிதில் சென்று அடைந்து விடுகின்றன. தற்போது உலகம் முழுவதும் பல்வேறு விதமான பிராண்டுகளில் பீர் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பீர் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது. வெயிலை சமாளிக்க இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை, சொல்லப்போனால் பெண்களும் விரும்பி பீர் குடிக்க ஆரம்பித்துள்ளனர்.

பீர் உடம்புக்கு நல்லது, உடல் சூட்டை தணிக்கும் என சிலர் கூறுகின்றனர். சிலர் ஒருபடி மேலே சென்று பீர் குளிர்பானம்தான், போதைப் பொருள் கிடையாது என்கின்றனர். பீர் குடித்தால் உடல் உஷ்ணத்தை தணித்து சிறுநீரக கற்கள் வராமல் பாதுகாக்கும், மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்கள் வராது, மன அழுத்தத்தை போக்கும் எனவும் சிலர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். ஆனால் உண்மையில் பீர் குடித்தால் என்ன நடக்கும் என மருத்துவர்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றனர்.

அந்த வகையில், பெரம்பூர் சென் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் வெங்கடேசன் கூறுகையில், ‘‘வெயில் காலங்களில் அதிகமான அளவு பீர் வகைகளை எடுத்துக் கொள்வதால் ஆல்கஹால் உடலில் கலந்து வறட்சி தன்மையை ஏற்படுத்துகிறது. மிகவும் குளிர்ச்சியாக பருகுவதால் தொண்டையில் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் உஷ்ணத்தை தணிக்க பீர் அருந்துகிறோம் என கூறுபவர்கள் அதற்கு மாற்றாக இளநீர், சுத்தமான பதநீர், பழ வகைகளை சாப்பிடலாம். மேலும் பீர் வகைகளை எடுத்துக் கொள்ளும்போது அதிகப்படியான சைடிஷ் எனப்படும் பொரித்த உணவுகளை சாப்பிகின்றனர்.

இதன் மூலம் கொழுப்பு, புரதச்சத்து அதிகரித்து தொப்பை, உடல் பருமன் ஏற்படுகிறது. எதையும் அளவோடு எடுத்துக் கொண்டால் பாதிப்பு கிடையாது. மதுபானங்களோடு ஒப்பிடுகையில், பீரில் ஆல்கஹால் குறைவு என்பதால் அதனை அளவோடு குடித்தால் பெரிய பிரச்னை வராமல் பார்த்துக் கொள்ளலாம். அளவுக்கு மீறினால் கண்டிப்பாக அது உடலுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே இயற்கையான குளிர்பானங்கள், காய்கறிகளை இளைஞர்கள் சாப்பிடலாம். மது வகைகளை தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

* ஆந்திராவை நோக்கி படையெடுக்கும் கள் பிரியர்கள்
தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பதற்கும் விற்கும் கள் வாங்கி குடிப்பதற்கும் 1986ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அன்று முதல் தமிழ்நாட்டில் கள் எனப்படும் போதைப் பொருட்களை விற்பனை செய்வது கிடையாது. சென்னையை அடுத்துள்ள கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திர எல்லையான பனங்காடு, ராமாபுரம், ஆரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கள் இறக்கி விற்கப்படுகிறது. கொல்கத்தா நெடுஞ்சாலையில் பல இடங்களில் கள் விற்பனை நடக்கிறது. தற்போது சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் இளைஞர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் ஆந்திராவிற்கு சென்று கள் வகைகளை விரும்பி சாப்பிடுகின்றனர். உடல் உஷ்ணத்தை குறைத்து உடலுக்கு சக்தியை தருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்காக சென்னையில் இருந்து வரும் நபர்களை மகிழ்விக்க ஆந்திர எல்லைகளில் வாத்துக் கறி, நாட்டுக்கோழி முட்டை, கருவாடு போன்றவற்றை வீடுகளில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் வார இறுதி நாட்களில் ஆந்திர எல்லையில் தற்போது ஒவ்வொரு தோப்புகளிலும் இளைஞர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

* அவசர கதியில் தயாரிப்பு கூடாது
பீர் வகைகளை உற்பத்தி செய்த பின் 12 நாட்கள் வரை ஊற வைக்க வேண்டும். பின் வடிகட்டி பாட்டிலில் நிரப்பும் பணி மேற்கொள்ளப்படும். ஒரு பாட்டிலில் 650 மில்லி என நிரப்பப்பட்டு விற்பனை செய்யப்படும். தற்போது வெயில் காலம் என்பதால் அதிகப்படியான பீர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 12 முதல் 14 நாட்கள் நன்றாக ஊற வைத்தால்தான் முழுமையான சுவை தெரிய வரும். ஆனால் சில நிறுவனங்கள் பீர் அதிகப்படியாக விற்பனை செய்யப்படுவதால் அவசர கதியில் இரண்டு மூன்று நாட்களில் தயார் செய்து அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனால் பீரின் சுவை மாறுபட்டு மதுபிரியர்கள் அதனை விரும்பாமல் ஒரு பிராண்டில் இருந்து இன்னொரு பிராண்டுக்கு மாறுகின்றனர்.

* கூலிங் பீர் கிடைப்பதில் சிக்கல்
தற்போது பீர் விற்பனை அதிகரித்துள்ளதால் சென்னையில் தொடர்ந்து அடுத்தடுத்து கூலிங் பீர்கள் உடனே விற்று தீர்ந்து விடுகின்றன. இதனால் பீர் வகைகள் கூலிங்காக கிடைப்பதில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் உள்ளது. இதுகுறித்து கடைக்காரர்கள் தெரிவிக்கையில் அடிக்கடி பிரிட்ஜ்களை திறந்து மூடுகிறோம். இதனால் கூலிங் நிற்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் தொடர்ந்து விற்பனை அதிகரித்துள்ளதால் பிரிட்ஜில் அடுக்கி வைத்த உடனே பீர்கள் விற்று விடுகின்றன. இதனால் மிகவும் கூலிங்காக பீர் வகைகளை விற்பனை செய்ய முடிவதில்லை என தெரிவித்தனர்.

The post சதம் அடிக்கும் வெயிலையும் சமாளிக்கலாமாம்… மதுபிரியர்கள் நாடும் குளுகுளு பீர் வகைகள்: இயல்பை விட 40 சதவீதம் வரை விற்பனை அதிகரிப்பு; அளவு மீற வேண்டாமென மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: