இன்று (5ம்தேதி) உலக சிரிப்பு தினம்; ஆழ்ந்த சிரிப்பு மன அழுத்தத்தை தவிர்க்கும் கவலை, உடல் வலியையும் குறைக்கிறதாம்…விழிப்புணர்வு நாளையொட்டி உளவியல் ஆய்வாளர்கள் தகவல்

‘பெரும் போராட்டங்கள் தராத வெற்றியை சில நேரங்களில் ஒரு புன்னகை தந்துவிடும்’ என்றார் ஆங்கிலக்கவிஞர் ஒருவர். இந்த புன்னகையின் பெரும் மகிழ்வாய் வெளிப்படுவது தான் சிரிப்பு. ஐந்தறிவு ஜீவன்களில் இருந்து ஆறறிவு கொண்டவனாய் மனிதனை தனித்துக்காட்டுவதும் சிரிப்புதான். சிரிப்பு என்பது இதயங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது. இந்த மகிழ்ச்சியானது உடலுக்கு மட்டுமன்றி மனதின் ஆரோக்கியத்திற்கும் வலுவூட்டும் அருமருந்தாக திகழ்கிறது என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள். இத்தகைய மகத்துவம் வாய்ந்த சிரிப்பின் பெருமைகளை உலக மக்கள் உணரும் வகையில் ஆண்டு தோறும் மே மாதத்தின் முதல்ஞாயிற்றுக்கிழமை உலக சிரிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் இன்று (5ம்தேதி) உலக சிரிப்பு தினத்தை ெகாண்டாடுகின்றனர் மக்கள். இதையொட்டி சிரிப்பின் முக்கியத்துவம் குறித்த பல்வேறு தகவல்களை உளவியல் வல்லுநர்களும், மருத்துவ நிபுணர்களும் வெளியிட்டு வருகின்றனர். இது குறித்து மனநலம் சார்ந்த உளவியல் வல்லுநர்கள் கூறியதாவது: ஆழ்ந்த சிரிப்பு நம் தசைகளை தளர்த்துகிறது. இது மனஅழுத்தத்தை தவிர்க்க உதவுகிறது.

சிரிப்பின் போது நமது உடல் நேர்மறையான நிகழ்வுகள் மற்றும் ரசாயனங்களுடன் தொடர்புடைய ரசாயனங்களை வெளியிடுகிறது. இதனால் கவலை மட்டுமன்றி உடல்வலியும் குறைகிறது. யோகாவை போலவே சிரிப்பின் உடல் செயல்பாடும் ஆழ்ந்த சுவாசத்தை உள்ளடக்கியது. சிரிப்பதால் நமது உடல் முழுவதும் ஆக்சிஜன் ஓட்டம் அதிகரிக்கிறது. நாம் சிரிக்கும் போது நமது நுரையீரலில் உள்ள பழைய காற்று வெளியேறுகிறது. சிரிப்பு மனஅழுத்தம் போக்கும் அரிய மருந்து என்பது உடலியல் ரீதியாகவும் மருத்துவம் உறுதிப்படுத்தியுள்ள உண்மை. மனித உடலில் எபிநெப்ரின், நார் எபி நெப்ரின், கார்டிசால் ஆகியவை மனஅழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்களாக உள்ளது. மனிதர்கள் மனம் விட்டு சிரிக்கும்போது இந்த ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. இதனால் இயல்பாகவே மனஅழுத்தம் என்பதும் குறைந்து விடுகிறது. மகிழ்ச்சி, வெற்றி, ஆறுதல், ஆசுவாசம் என்று பல உணர்வுகளை வெளிப்படுத்துகிறது சிரிப்பு. இது மூளையில் என்டர்பின்களை சுரக்கச் செய்கிறது. என்டர்பின்களின் சுரப்பு என்பது மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கிறது.

ரத்தகுழாயின் உட்சுவரான எண்ேடாதீலியத்தின் சுருக்கமும், அதில் கொழுப்பு படிவதும்தான் ரத்தக்கொதிப்பு, மாரடைப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு காரணம். ஒருவர் மனம்விட்டுச் சிரிக்கும் போது எண்ேடாதீலியம் விரிவடைகிறது. அதிக ரத்தக்கொதிப்பால் வரும் மாரடைப்பை விட, மகிழ்ச்சி குறைவால் வரும் மாரடைப்பே அதிகம் என்று ஆய்வுகளில் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மகிழ்ச்சிக்கான அடித்தளமே சிரிப்பு தான். வயிறு குலுங்க வைக்கும் சிரிப்புதான் மாரடைப்பை தள்ளிப்போடும் விலையில்லா மருந்து. வயிறு குலுங்க பத்து நிமிடங்கள் சிரிப்பது, இரண்டு மணிநேரம் வலியை மறக்க வைக்கும் நிவாரணத்துக்கு சமம். இது மட்டுமன்றி மனரீதியாக சிரிப்பு என்பது வாழ்க்கையை நேர்மறையாக உணரச் செய்கிறது. சவால்களை எதிர்கொள்ளவும், கடினமான சூழல்களை நிதானமாக சமாளிக்கவும் சிரிப்பு உதவுகிறது. இதையெல்லாம் மனதில் வைத்து தான் நமது முன்னோர்கள் ‘வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்’ என்று சொல்லி இருக்கிறார்கள். ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடான இந்த சொல் அத்தனை உண்மையானது. எனவே அனைத்து தரப்பு மக்களும் இக்கட்டான நேரங்களில் கூட இனிய நிகழ்வுகளை மனதில் அசைபோட்டு அதன் நினைவுகளில் மகிழலாம். இந்த மகிழ்வும் சிரிப்பும் நிச்சயம் பெரும் மனஅழுத்தத்தை இலகுவாக்கி விடும்.இவ்வாறு உளவியல் வல்லுநர்கள் கூறினர்.

 

 

The post இன்று (5ம்தேதி) உலக சிரிப்பு தினம்; ஆழ்ந்த சிரிப்பு மன அழுத்தத்தை தவிர்க்கும் கவலை, உடல் வலியையும் குறைக்கிறதாம்…விழிப்புணர்வு நாளையொட்டி உளவியல் ஆய்வாளர்கள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: