மலேசியாவின் 8-வது பிரதமராக முகைதீன் யாசின் பதவியேற்பு: அந்நாட்டு மன்னர் சுல்தான் அஹ்மத் ஷா உட்பட முக்கிய தலைவர்கள் வாழத்து

கோலாலம்பூர்: முகமது மஹாதிர் ராஜினாமா செய்த நிலையில், மலேசியாவின் 8-வது பிரதமராக முஹைதீன் யாசின் பதவியேற்றார். மலேசியாவில் கடந்த 2018ல் நடந்த தேர்தலில் மகாதீர் முகமது - அன்வர் இப்ராகிம் இடையேயான  நம்பிக்கை கூட்டணி வெற்றி பெற்றது. முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தலைமையிலான ஐக்கிய மலாய்ஸ் தேசிய அமைப்பு தோல்வி அடைந்தது. இதன் மூலம் உலகின் மிக வயதான பிரதமராக 94 வயதான மகாதீர் முகமது பொறுப்பேற்றார்.  ஆட்சிக் காலத்தில் பாதி ஆண்டுகள் மகாதீரும், மீதி ஆண்டுகளில் அன்வரும் பிரதமராக இருப்பது என்ற வாக்குறுதியுடனே அக்கூட்டணி அமைக்கப்பட்டது.

இதன்படி மகாதீரின் 2 ஆண்டு பதவிக்காலம் முடிந்த நிலையில் அவர் பிரதமர் பதவியை விட்டுத்தர வேண்டி வந்தது. ஆனால் அன்வரை பிரதமராக்க கட்சியில் எதிர்ப்பு கிளம்பியதால் உட்கட்சி மோதல் வெடித்தது. கூட்டணியிலும் குழப்பம்   நிலவியது. எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் மகாதீரின் முயற்சியும் பலிக்கவில்லை. இதனால் கடந்த வாரம் அவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். இடைக்கால பிரதமராக பதவி வகித்தார்.   இருந்தபோதிலும் ஆட்சியை பிடிக்க குதிரைப் பேரங்கள் நடந்து வந்தன.

இதற்கிடையே, முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் அந்நாட்டு மன்னர் சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அஹமது ஷா ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் முகைதீன் யாசினை புதிய பிரதமராக மன்னர் சுல்தான்  அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா நேற்று அறிவித்தார். முகைதீனுக்கு பெரும்பாலான எம்பிக்கள் ஆதரவு இருப்பதாகவும் நாட்டின் நலன் கருதி அவர் உடனடியாக இன்று பதவியேற்பார் என்றும் மன்னர் அறிவித்தார்.

இந்நிலையில், மன்னர் சுல்தான் அப்துல்லாஹ் சுல்தான் அஹமது ஷா அறிவித்தப்படி, 72 வயதான முஹைதீன் யாசின் மலேசியாவின் 8-வது பிரதமராக பதவியேற்றார். பதிவேற்பு விழாவில் நாட்டின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, முஹைதீன் யாசின் நாடாளுமன்றத்தில் தனது பெருன்பான்மையை நிரூபிக்கவுள்ளார்.

Related Stories: