வேறு ஒருவரின் திட்டத்தை காப்பியடித்து புதிய அமைப்பு : தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி பிரிவுகளில் வழக்குப்பதிவு

பாட்னா  : பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ஆகியோரின் வெற்றிக்குக் காரணமானவர் எனக் கூறப்படும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் மீது நம்பிக்கைத் துரோகம், மோசடி ஆகிய பிரிவுகளில் பீகார் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் தொடங்கிய பாத் பீகார் கி என்ற இயக்கம் தனது சிந்தனையில் உதித்து உருவாக்கியது என்பது சாஸ்வத் கவுதம் என்பவரது புகாராகும். தன்னுடன் பணியாற்றிவர் மூலம் திட்டத்தை காப்பி அடித்துவிட்டு பிரசாந்த் கிஷோர் புதிய இயக்கம் தொடங்கி விட்டதாக சாஸ்வத் கவுதம் மோதிகாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதன் பேரில் பிரசாந்த் கிஷோர் மீது ஐபிசி 420 மற்றும் 406 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூக வகுப்பாளராக இருந்த பிரசாந்த் கிஷோர், பீகாரில் ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவராகவும் செயல்பட்டார். பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் ஏற்பட்ட பிணக்கால் பிரசாந்த் கிஷோர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் பிரசாந்த் கிஷோருக்கு எதிராக தற்போது ஏமாற்றுதல், நம்பிக்கைத் துரோகம் செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கும் பாய்ந்து இருக்கிறது. பாத் பீகார் கி என்பது பீகாரை நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாற்றுவதற்காகப் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் இயக்கமாகும்.

Related Stories: