தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைடெல்லியில் பைப் லைன்களை போலீஸ் பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் அடிசி வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் குழாய்கள், தண்ணீர் செல்லும் பைப் லைன்களை பாதுகாக்க காவல்துறையினரை பணியில் அமர்த்த டெல்லி அமைச்சர் அடிசி வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் வெய்யில் காரணமாக கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம், அரியானா ஆகிய மாநிலங்கள் யமுனையில் இருந்து டெல்லிக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை தர மறுப்பதே டெல்லியின் வரலாறு காணாத தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம் என டெல்லி ஆம் ஆத்மி அரசு குற்றம்சாட்டி வருகிறது.

டெல்லியில் நாளொன்றுக்கு 1,000 மில்லியன் கேலன் அளவுக்கு நீர் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 900 மில்லியன் கேலன்களுக்குகீழ் சென்றுள்ளது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 70 மில்லியன் கலோன்கள் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  டெல்லியில் குடிநீரை வீணாக்கினால் ரூ.2,000 அபராதம், குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்து வாகனங்களை கழுவுதல், தொட்டிகளில் அதிகளவில் நீர் சேமித்து வைத்தல் போன்ற செயல்கள் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்லி தண்ணீர் பிரச்னை தொடர்பான வழக்கில் யாரும் தண்ணீரை வீணாக்கக் கூடாது என உச்ச நீதிமன்றமும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில், டெல்லியில் தண்ணீர் செல்லும் முக்கிய குழாய்கள் சேதமடைந்திருப்பது டெல்லி அரசுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அடிசி காவல்துறை ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “டெல்லியில் கடும் தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழலில் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் விலை மதிப்பற்றது.

இந்நிலையில் சோனியா விஹார் டபிள்யூடிபியிலிலுந்து தெற்கு டெல்லிக்கு தண்ணீரை கொண்டு செல்லும் முக்கிய குழாயில் பெரிய கசிவு ஏற்பட்டுள்ளது. டெல்லி தண்ணீர் பிரச்னையில் ஆம் ஆத்மி அரசுக்கு வேண்டுமென்ேற அவப்பெயர் ஏற்படுத்த இதுபோன்ற சதி செயலில் சிலர் ஈடுபடுகின்றனர்.

இதனை கண்காணிக்கவும், தடுக்கவும் தில்லி நீர்வாரியம், தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்களுக்கு காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும். மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நீர்த்தேக்கங்களுக்கும் காவல்துறையினரை நிறுத்தி கண்காணிக்க வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

The post தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்னைடெல்லியில் பைப் லைன்களை போலீஸ் பாதுகாக்க வேண்டும்: அமைச்சர் அடிசி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: