3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்: 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருமலை: திருமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் காத்திருக்கின்றனர். தங்கும் அறைகள் காலி இல்லை என்பதால் திருப்பதியில் தங்கிக்கொள்ளும்படி தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வாரவிடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 82,886 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 44,234 பக்தர்கள் தலைமுடி காணிக்கையாக செலுத்தினர். நேற்று முன்தினம் இரவு கோயில் உண்டியலில் காணிக்கை எண்ணப்பட்டது. அதில் ரூ.4.09 கோடி காணிக்கை கிடைத்தது.  பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் கோடை விடுமுறை முடிந்து செயல்பட தொடங்கியுள்ளது. இருப்பினும் சனி, ஞாயிறு மற்றும் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று வரை 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் நேற்றுமுன்தினம் இரவு பக்தர்களின் வருகை மேலும் அதிகரித்தது.

இதனால் நேற்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் முழுவதும் நிரம்பி பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரமுள்ள நந்தகம் கெஸ்ட் அவுஸ் வரை நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசன டிக்கெட் இன்றி வரும் பக்தர்கள் 30 மணி நேரமும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரமும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 8 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் தங்கும் அறை கிடைக்காமல் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். பலர் வெட்டவெளியிலும், ஆங்காங்கே உள்ள கோயில் மண்டபங்களிலும் குழந்தைகள், முதியோருடன் தங்கியுள்ளனர்.

இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் நேற்று கூறுகையில், `திருமலையில் 40 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கான வசதி மட்டுமே உள்ளது. தற்போது தொடர் விடுமுறையால் திருமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால் தங்கும் அறைகள் எதுவும் காலியாக இல்லை. எனவே பக்தர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கிய தரிசன நேரத்தின்போது மட்டுமே திருமலைக்கு வந்தால் போதுமானது. அதுவரை திருப்பதியில் தங்கலாம்’ என கூறினர்.

The post 3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்: 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: