இந்திரா காந்தி இந்தியாவின் தாய் என்று நான் கூறவில்லை: ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி திடீர் பல்டி

திருவனந்தபுரம்: இந்திரா காந்தி இந்தியாவின் தாய் என்று நான் கூறவில்லை என்று ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி திடீர் பல்டியடித்துள்ளார். ஒன்றிய இணையமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சுரேஷ் கோபி கடந்த சில தினங்களுக்கு முன் கேரளா வந்தார். கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் திருச்சூர் மாவட்டங்களிலுள்ள கோயில்களில் தரிசனம் செய்த இவர், கண்ணூரிலுள்ள முன்னாள் முதல்வர் இ.கே.நாயனாரின் வீட்டுக்கும், திருச்சூர் பூங்குன்னத்திலுள்ள முன்னாள் முதல்வர் கே. கருணாகரனின் நினைவிடத்திற்கும் சென்றார்.

கருணாகரனின் நினைவிடத்தில் வைத்து இவர் நிருபர்களிடம் கூறுகையில், கருணாகரன் கேரளாவின் தந்தை என்றும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவின் தாய் என்றும் கூறினார். சுரேஷ் கோபியின் இந்தக் கருத்து பாஜ கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து அறிந்த கட்சி மேலிடம் அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தற்போது சுரேஷ் கோபி பல்டியடித்துள்ளார்.

நேற்று திருவனந்தபுரத்தில் அவர் கூறியது: இந்திரா காந்தி இந்தியாவின் தாய் என்றோ, கருணாகரன் கேரளாவின் தந்தை என்றோ நான் கூறவில்லை. நான் கூறியதை பத்திரிகைகள் திரித்து வெளியிட்டுள்ளன. கருணாகரன் கேரள காங்கிரஸ் கட்சிக்கு தந்தை என்றும், அதேபோல இந்திய காங்கிரசுக்கு இந்திரா காந்தி தாய் என்றும் தான் நான் கூறினேன். இதை காங்கிரஸ் கட்சியினர் யாரும் மறுக்க மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.

The post இந்திரா காந்தி இந்தியாவின் தாய் என்று நான் கூறவில்லை: ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபி திடீர் பல்டி appeared first on Dinakaran.

Related Stories: