பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரேஸ் வீட்டின் மீது விழுந்து தீப்பற்றி எரிந்த கார்

மாதனூர்: பெங்களூரு- சென்னை ரேஸ் கார் போட்டியில் மாதனூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் வீட்டின் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. பெங்களூருவிலிருந்து சென்னை நோக்கி நேற்று பிற்பகல் 2 மணியளவில் 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மின்னல் வேகத்தில் ரேஸ் செல்வதுபோல சென்று கொண்டிருந்தது. திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் அடுத்த அகரம்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது கார்கள் ஒன்றுடன் ஒன்று முந்திச் சென்றது. இதில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு கார் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கர சத்தத்துடன் மோதியது.

பின்னர் தடுப்பு சுவரை இடித்து விட்டு, சுமார் 100 அடி தூரம் சாலையை விட்டு விலகி சென்ற கார் சாலையோரம் 15 அடி பள்ளத்தில் இருந்த ஒரு வீட்டின் முன்பகுதியில் உள்ள தகர சீட் மீது விழுந்து தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் காரில் வந்த 3 பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தங்களுடன் வந்த மற்றொரு காரில் ஏறி தப்பிச்சென்றனர். அந்த வீட்டிலும் அப்பகுதியிலும் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சென்னை நோக்கி 5 ரேஸ் கார்கள் சென்றுள்ளது. இதில் ஒன்றுடன் ஒன்று முந்தும்போது ஒரு கார் வீட்டின் மேல் விழுந்து தீ பிடித்து எரிந்தது. அந்த காரில் பலூன் இருந்ததால் 3 பேர் சிறு காயங்களுடன் தப்பி உள்ளனர். கார் நம்பரை பார்க்கும்போது டெல்லியை சேர்ந்த கார் என தெரிந்தது’ என்றனர்.

Related Stories: