கர்ப்பிணி, நர்சிங் பெண்களுக்கான வருகை பதிவு விதிமுறைகளை தளர்த்தக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி:  கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் கர்ப்பிணி பெண்களுக்கு  வருகை பதிவு விதிமுறைகளை தளர்த்தக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் கர்ப்பிணி பெண்கள் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்கக் கோரி  டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் கல்ரா என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவரது அந்த மனுவில் கூறியுள்ளதாவது: கருத்தரிப்பு,  குழந்தை பிறப்பு மற்றும் பிறப்புக்குப் பிறகான குழந்தை பராமரிப்பு போன்ற  காரணங்களால்  வகுப்புகளில் கலந்து கொள்ள இயலாத நிலையில் உள்ள பெண்களால் வருகை பதிவுகளை இயல்பாக மேற்கொள்ள இயலாது. இதனால் வருகை பதிவு விதிகளை காரணம்காட்டி செமஸ்டர் தேர்வுகளை எழுத அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, இதுபோன்ற பெண்களின் உரிமைகளை பாதுகாக்கவும்,வருகை பதிவு விதிமுறைகளில் தளர்வு வழங்கவும் உயர்மட்ட கமிட்டியை அமைத்து பரிந்துரைகளை வழங்க உத்தரவிட வேண்டும்.

மேலும், பணிபுரியும் கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகையை போன்றே, கல்வி நிறுவனங்களில் பயின்று வரும் பெண்களுக்கும் வருகை பதிவில் தளர்வு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். மேலும்,  கல்வி நிறுவனங்களில் படிக்கும் மற்றும் கர்ப்பமாக இருக்கும்,  பெற்றெடுத்த அல்லது பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு சூழ்நிலைகளில் உள்ள  பெண்களுக்கு வருகை தேவைகளில் தளர்வு வழங்குவதற்கான விதிமுறைகள் அல்லது  வழிகாட்டுதல்களை வடிவமைக்க யு.ஜி.சி, பி.சி.ஐ, எம்.சி.ஐ மற்றும்  ஏ.ஐ.சி.டி.இக்கு பிரதிநிதிகள் அனுப்பப்பட்டனர். எனினும், இதில் எந்த  நிறுவனத்திடமிருந்தும் இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்பதால் இந்த  மனுவை  தாக்கல் செய்துள்ளேன் என்றும் கல்ரா தெரிவித்தார்.

கல்ராவின் இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன் பாட்டீல் மற்றும் சி ஹரிசங்கர் அடங்கிய அமர்வு நீதிபதிகள், இந்த பொதுநல மனுவிற்கு விளக்கம் அளிக்கக்கோரி மத்திய அரசு, பல்கலை மானியக்குழு(யுஜிசி), பார் கவுன்சில் ஆப் இந்தியா(பிசிஐ), இந்திய மருத்துவ கவுன்சில்(எம்சிஐ), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ)  ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே மாதம் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

Related Stories: