‘கொரோனா’ வைரஸ் பரவல் எதிரொலி ஜப்பான் கப்பலில் தவிக்கும் கணவரை மீட்கக்கோரி மனு

மதுரை:  ஜப்பான் நாட்டில் கப்பலில் சிக்கி தவிக்கும் கணவரை மீட்கக்கோரி, மதுரை கலெக்டரிடம் மனைவி மற்றும் திமுக எம்எல்ஏ மனு அளித்தனர். மதுரை, நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த அன்பழகன் மனைவி மல்லிகா(35). இவர், தனது உறவினர்கள் மற்றும்  திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணனுடன் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். இவர் கலெக்டர் வினயிடம் கோரிக்கை மனு அளித்தார்.

மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் அன்பழகன். ஜப்பான் நாட்டு கப்பலில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ஜப்பான் நாட்டை சேர்ந்த ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல், ஜப்பானில் உள்ள யோகோஹாமா துறைமுகத்தில் கடந்த 9 நாட்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்பலில் பயணித்த 60 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கூறி சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர். கப்பலில் எனது கணவர் மற்றும் திருச்சியை சேர்ந்த ஜெயராஜ் உட்பட 6 தமிழர்கள் பரிதவித்து வருகின்றனர். எனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு தெரிவித்திருந்தார்.

‘இந்திய தூதரகம் மூலம் அன்பழகனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என கலெக்டர் வினய் உறுதியளித்தார். இதுகுறித்து மல்லிகா கூறுகையில், ‘‘எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. எனது கணவர் கப்பலில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது ஜப்பான் நாட்டில் பரிதவித்து வருகிறார். அவருடன் தினமும் வீடியோ காலில் பேசி வருகிறேன். கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.இதே கோரிக்கையை வலியுறுத்தி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணணும் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.

Related Stories: