திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ரூ.1.42 கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. இதில் காணிக்கையாக ரூ.1 கோடியே 42 லட்சம் கிடைத்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று, பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து, கிரிவலம் செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம்.

இதையடுத்து, உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி முடிந்த பின்னர்  நடப்பது வழக்கம். அதன்படி, தை மாத பவுர்ணமி கடந்த 8ம் தேதி தொடங்கி மறுநாள் 9ம் தேதி பிற்பகல் நிறைவடைந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இந்நிலையில், உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் ஞானசேகர் முன்னிலையில் நடந்தது. இதில் உண்டியல் காணிக்கையாக ரூ.1 கோடியே 42 லட்சம், 311 கிராம் தங்கம், 1,314 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

Related Stories: