பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தில் வருமான வரி சோதனை; பைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலும் ரெய்டு

சென்னை: சென்னையில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை தியாகராய நகரில் உள்ள வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அந்த படத்தால் மிகப்பெரிய லாபம் பெற்றதாகவும் அந்தப் படம், ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது.

ஒருபக்கம் பிகில் படம் பெரிய அளவில் லாபம் கொடுத்தது என்று கூறப்பட்டாலும் இன்னொரு பக்கம் பிகில் திரைப்படம் நஷ்டம் என்றும் போட்ட முதலீடு கூட தயாரிப்பு நிறுவனத்திற்கு கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் வரி ஏய்ப்பு புகாரில் ஏ.ஜி.எஸ். நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தனி ஒருவன், அனேகன் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஏஜிஎஸ் சினிமாஸ் பல படங்களை வெளியிட்டுள்ளது. மேலும் ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமாக திரையரங்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பைனான்சியர் அன்புசெழியன் வீட்டிலும் சோதனை

பிரபல சினிமா பைனான்சியர் அன்பு செழியன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தியாகராயர் நகரில் உள்ள அன்பு செழியன் நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. மருது, ஆண்டவன் கட்டளை, தனுஷின் தங்கமகன், வெள்ளக்காரத்துரை உள்ளிட்ட படங்களை கோபுரம் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். சசிகுமாரின் உறவினரும் தயாரிப்பாளருமான அசோக்குமாரின் தற்கொலைக்கு காரணமானவர் என்று அன்புசெழியன் மீது புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: