டிஎன்பிஎஸ்சி அழைப்பாணை கடிதம் அனுப்பாததால் வேலைவாய்ப்பை இழந்த வேளாண் பட்டதாரி: கோர்ட்டுக்கு செல்லும்படி அதிகாரிகள் அலட்சிய பதில்,.. பாதிக்கப்பட்ட மாணவன் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: டிஎன்பிஎஸ்சி அழைப்பாணை கடிதம் அனுப்பாததால் வேளாண் பட்டதாரி ஒருவர் வேலைவாய்ப்பை இழந்துள்ளார்.  டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உதவி வேளாண் அதிகாரி பணியில் காலியாக உள்ள 570 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை நடத்தியது. இதில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆணைமலை பகுதியை சேர்ந்த முகமது தௌபிக் தேர்ச்சி பெற்றார். சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் நவம்பர் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அவருக்கு கடிதம் வந்தது. இதையடுத்து, அவரும் தனது சான்றிதழை பதிவு செய்தார். 2 மார்க் குறைவாக எடுத்ததால் அவருக்கு முதல்கட்ட கவுன்சிலிங்கில் இடம் கிடைக்கவில்லை. இரண்டாம் கட்ட கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டார். இதில் கலந்துகொள்ளுமாறு முகமது தௌபிக்குக்கு இ-மெயில், செல்போன் மூலம் அழைப்பு அனுப்பப்பட்டது.

ஆனால், வழக்கம் போல் அனுப்பப்படும் தபால் மூலம் அழைப்பாணை டிஎன்பிஎஸ்சி சார்பில் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர் கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளாத நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் நேற்று சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளை சந்தித்து முறையீடு செய்தார். ஆனால், அங்குள்ள அதிகாரிகள் பொறுப்பற்ற பதிலை கூறி, நீங்கள் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி விட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவன் முகமது தௌபிக் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி நடத்திய உதவி வேளாண் அதிகாரி தேர்வில் வெற்றி பெற்றேன். 2 மார்க் குறைவாக எடுத்ததால் முதல்கட்ட கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள முடியவில்லை. இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் எனக்கு இடம் கிடைத்தது. ஆனால், முறையாக எனக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. எனக்கு செல்போன் மூலமும், இ-மெயில் மூலமாகவும் தகவல் அனுப்பியதாக கூறுகின்றனர்.

எனது செல்போன் தொலைந்ததால் எஸ்எம்எஸ் வந்தது தெரியாது. மேலும் எனது தந்தை மரணம் போன்றவற்றால் அழைப்பை என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. எனக்கு திருமணம் நடந்ததால் இ-மெயிலை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. நான் தபால் வரும் வரும் என்று காத்துக்கொண்டிருந்தேன். திருமணம் முடிந்த பின்னர் தான் மெயிலை பார்த்தேன். இதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். இதுதொடர்பாக சென்னை டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து புகார் கொடுத்தேன். அப்போது அதிகாரிகள் உதவி வேளாண் அதிகாரி பணியிடத்துக்கான கவுன்சிலிங் முடிந்து விட்டது. உங்களுக்கு கடிதம் அனுப்ப மறந்து விட்டோம் என சர்வசாதாரணமாக கூறினர். இப்போது டிஎன்பிஎஸ்சியில் பல்வேறு பிரச்னை நடந்து வருகிறது. நீங்கள் வேண்டுமானால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள் என்று பொறுப்பற்ற பதிலை அளித்து திருப்பி அனுப்பி விட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: