25 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு; நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாளை காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை தலைமையில் நடக்கிறது

சென்னை: 25 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாளை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி பல கட்டங்களாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. மேலும், நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து அக்குழுவின் பரிந்துரைகளை சட்ட மசோதாவாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், இதுவரை அதற்கான ஒப்புதலை பெற முடியவில்லை. இந்நிலையில் 2021ம் ஆண்டு நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண் பெற்றவர்கள் இரண்டு மாணவர்கள் தான். 2022ம் ஆண்டை பொறுத்தவரை பூஜ்ஜியம், 2023ல் 2 மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றிருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக 67 மாணவர்கள் என்று வெளிவந்திருக்கிறது. இதில் பல்வேறு குளறுபடிகளும், குழப்பங்களும் ஏற்பட்டிருக்கின்றன.

தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் பல்வேறு சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் இடமளித்திருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அரியானா மாநிலத்தில் உள்ள பரிதாபாத் என்கிற இடத்தில் ஒரு தேர்வு மையத்தில் இருந்து மட்டும் 8 பேர் முதல் 100 இடங்களில் இடம் பெற்றிருக்கிறார்கள். இப்படி நடப்பதற்கு சாத்தியமேயில்லை. எங்கெல்லாம் தவறு நடந்ததோ அதை கண்டுபிடிப்போம் என்று தேசிய தேர்வு முகமை கூறுகிறது.

எல்லா தவறுகளுக்கும் தேசிய தேர்வு முகமை துணை போகியிருக்கிறது. இந்நிலையில் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் அளித்ததில் முறைகேடுகள் என நாடு முழுவதும் உருவாகியிருக்கிற எதிர்ப்பை வீதி முதல் நாடாளுமன்றம் வரை நீட் தேர்வு ஊழலை எழுப்புவோம் என்று தலைவர் ராகுல்காந்தி கூறியிருக்கிறார்.

25 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி இதுவரை மவுனம் சாதித்து வருகிறார். எனவே, அகில இந்திய காங்கிரஸ் அறிவுறுத்தலின் படியும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எனது தலைமையில் நாளை (21ம்தேதி) மாலை 3 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

நீட் தேர்வை தமிழகம் தொடர்ந்து எதிர்த்து வருகிறது. தொடர்ந்து நீட் தேர்வு திணிப்பை ஒன்றிய பாஜ அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் தோன்றிய எதிர்ப்பு நாடு முழுவதும் இன்றைக்கு கடும் எதிர்ப்பாக மாறியிருக்கிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மருத்துவ கல்லூரிக்கான நுழைவு தேர்வு நடத்தும் அதிகாரத்தை அந்தந்த மாநில அரசுளுக்கே வழங்க வேண்டுமென்ற ராகுல்காந்தியின் வாக்குறுதியை நிறைவேற்றுகிற வகையில் நமது கண்டனக் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும் என திரளாக கலந்து கொள்ள அழைக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post 25 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு; நீட் தேர்வை ரத்து செய்ய கோரி நாளை காங்கிரசார் ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை தலைமையில் நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: