மேற்கு வங்கத்தில் உட்கட்சி பூசல் வெடித்தது; திரிணாமுல் காங்கிரசுக்கு தாவும் 3 பாஜ எம்பிக்கள்: ஒன்றிய குழுவை அனுப்பிய டெல்லி

கொல்கத்தா: மேற்கு வங்க பாஜவில் உட்கட்சி பூசல் உச்சகட்டத்தை அடைந்துள்ள நிலையில் அக்கட்சியின் மாநிலங்களவை எம்பி அனந்த் மகாராஜா, முதல்வர் மம்தா பானர்ஜியை திடீரென சந்தித்து பேசினார். மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற பாஜ எம்பிக்கள் 3 பேர் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவ போவதாகவும் செய்திகள் வெளியாகின. இதனால் டெல்லி பாஜ மேலிடம், மேற்கு வங்கத்துக்கு அவசரமாக ஒன்றிய குழுவை அனுப்பி வைத்துள்ளது.

மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜ கபளீகரம் செய்துவிட போகிறது என பெரும்பாலான கருத்து கணிப்புகள் தெரிவித்திருந்தன. ஆனால் அங்கு மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 29 இடங்களை கைப்பற்றியது. பாஜவால் 12 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இதனால் கருத்து கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகின. இதனிடையே மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்தே, பாஜவின் 3 புதிய எம்பிக்கள், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ போகிறார்கள்; பாஜ எம்பிக்கள் எண்ணிக்கை மேலும் குறையும் என அக்கட்சி மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பாஜவின் சவுமித்ரா கான் என்ற எம்பி, உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் காலில் விழுந்து வாழ்த்து பெற்றார். தற்போதைய மக்களவை தேர்தலில் வெறும் 5,567 வாக்குகளில் வென்றவர் சவுமித்ரா கான். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜியை புகழ்ந்தும் பேசி வருகிறார். இவரை போலவே வேறு சில பாஜ எம்பிக்களும் திரிணாமுல் காங்கிரசை புகழ்ந்து வருகின்றனர்.

இதன் அடுத்த கட்டமாகவே பாஜவின் மாநிலங்களவை எம்பி அனந்த் மகாராஜா, முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியிருக்கிறார். அவர், கூச்பிகார் பகுதியை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டும் என கோரி வருகிறார். பாஜதான் முதலில் அனந்த் மகாராஜாவை பயன்படுத்தி கொண்டது. தற்போதைய தேர்தலில் கூச்பிகார் பகுதியில் பாஜ பெரும் பின்னடவை எதிர்கொண்டது. இதற்கு காரணம் அனந்த் மகாராஜா, மம்தாவின் திரிணாமுல் கை கோர்த்ததுதான். அத்துடன் உள்ளூர் பாஜ நிர்வாகிகளுக்கு எதிராக பல இடங்களில் பாஜ தொண்டர்களே போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இதனால் மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு ஆட்டம் காணும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில் பாஜவுக்கு கணிசமான செல்வாக்கு இருந்தாலும் பெரும்பாலான இடதுசாரிகள், பாஜவில் இணைந்ததால் விஸ்வரூபம் பெற்றது. தற்போது திடீரென பாஜவுக்குள் கலக குரல்கள் வெடிப்பதால் உடனடியாக ஒன்றிய குழு ஒன்றை டெல்லி மேலிடம் அனுப்பி வைத்திருக்கிறது. மேற்கு வங்க பாஜ எம்பிக்களை தக்க வைக்கவும் உள்ளூர் பாஜ மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் இந்த குழு உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளும் என தெரிகிறது.

The post மேற்கு வங்கத்தில் உட்கட்சி பூசல் வெடித்தது; திரிணாமுல் காங்கிரசுக்கு தாவும் 3 பாஜ எம்பிக்கள்: ஒன்றிய குழுவை அனுப்பிய டெல்லி appeared first on Dinakaran.

Related Stories: