தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் தொடங்கியது. விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மட்டும் பேசலாம் மற்றவர்கள் அமைதி காக்க சபாநாயகர் வேண்டுகோள் விடுத்தார். எச்சரிக்கையை மீறி தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து அதிமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விஷச் சாராய விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் துரைமுருகன்; கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டப்பேரவையில் கேள்வி நேரம் என்பது மிக முக்கியமானது, அந்த நேரத்தில் வேறு எந்த விவாதத்தையும் எடுக்க முடியாது என்பது விதி.

தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சராக இருந்தவர், அவருக்கு சட்டம் தெரியும். கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குறித்து அனைத்து கட்சியினரும் விவாதிக்கலாம். முக்கிய பிரச்சனைகள் குறித்த விவாதிக்க அனைவருக்கும் உரிமை உண்டு என்று கூறினார்.

The post தவிர்க்க முடியாத காரணத்தால் தான் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Related Stories: