மாநிலத்தின் நலன் கருதியே காங்கிரசுடன் கூட்டணி முதல்வர் ஆவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை: உத்தவ் தாக்கரே பேட்டி

மும்பை: முதல்வர் பதவியில் அமர்வது தனது கனவோ அல்லது நோக்கமோ இல்லை என்றும் தனது தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவே இந்த மிகப்பெரிய பொறுப்பை ஏற்க முடிவு செய்ததாகவும் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார். சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’ ஆசிரியர் சஞ்சய் ராவுத்துக்கு அளித்த பேட்டியில் முதல்வர் உத்தவ் தாக்கரே கூறியிருப்பதாவது: அரசியல் அதிகாரம் என்பது எனக்கு புதிதல்ல. ஏனெனில் என் குழந்தைப் பருவம் முதற்கொண்டே என் தந்தை அந்த அதிகாரத்தை கையாண்டு வந்திருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்க்காதது முதல்வர் பதவிதான். சிவசேனா தொண்டர் ஒருவரை மாநிலத்தின் முதல்வர் ஆக்குவதாக என் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்தவொரு நிலைக்கும் செல்ல நான் முடிவு செய்திருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதன் முதல் படிதான் நான் முதல்வர் ஆனது ஆகும். பா.ஜனதாவுடன் இணைந்து இருந்தால் என் தந்தைக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்த பிறகுதான் வேறு வழியின்றி முதல்வர் பதவியை ஏற்க ஒப்புக் கொண்டேன். இது பா.ஜனதாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். அதில் இருந்து அவர்கள் மீண்டு விட்டார்களா என்பது தெரியாது.

நான் அவர்களிடம் (பா.ஜனதா) சந்திரனை அல்லது நட்சத்திரங்களையா கேட்டேன்? மக்களவைத் தேர்தலுக்கு முன்பு எங்களுக்கு அவர்கள் அளித்திருந்த வாக்குறுதியைத்தான் நினைவுபடுத்தினேன். ஒருவருக்கு வாக்குறுதி அளிப்பதையும் அதை நிறைவேற்றுவதையும் என்னைப் பொறுத்தவரையில் இந்துத்துவ கொள்கையாகவே பார்க்கிறேன்.மாறுபட்ட கொள்கைகளைக் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருப்பதைப் பற்றி கேட்கிறீர்கள். இதற்கு முன்பும் இதுபோல நடந்திருக்கிறது. மத்தியில் இருந்த பா.ஜனதா தலைமையிலான முந்தைய அரசை உதாரணமாக கூற முடியும். பா.ஜனதாவின் கொள்கையும், ராம் விலாஸ் பஸ்வான் (லோக் ஜனசக்தி), நிதிஷ் குமார் (ஐக்கிய ஜனதா தளம்), மம்தா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்) மற்றும் சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்) ஆகியோரின் கொள்கையும் ஒன்றா? காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சியுடன் (பி.டி.பி.) கூட்டணி அமைத்து பிரிவினைவாதிகளுடன் அவர்கள் (பா.ஜனதா) பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றனர். தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதத்தில் முடிவு செய்வேன். நான் என் பொறுப்புகளை என்றைக்கும் தட்டிக்கழித்ததில்லை. மகாராஷ்டிரா கர்நாடகா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண எனது அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு உத்தவ் தாக்கரே கூறியிருக்கிறார்.

Related Stories: