வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற அதிக வாய்ப்பு: திவாகரன் பேட்டி

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தோப்புத்துறையில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் அளித்த பேட்டி:

 வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. அதிமுக, திமுகவுடன் அமமுக போட்டி போட முடியாது. எல்லாவகையிலும் திமுக தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் குரல் கொடுத்து வருகிறது. அந்த வகையில் யார் நல்லது செய்தாலும் பாராட்டுவேன். மத்திய அரசு செய்யும் அனைத்து காரியங்களும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ளது. மத்திய அரசு ஒரு கையில் மிட்டாயும், ஒரு கையில் விஷத்தையும் கொடுக்கிறது. ஆளும் அதிமுகவின் கைகள் கட்டப்பட்டுள்ளதால் மத்திய அரசை எதிர்க்க முடியாது. இப்போது அதிமுக உருமாறி உள்ளது.

அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் முறைகேடு நடப்பது தொடர்கிறது. கஷ்டப்பட்டு படிக்கும் மாணவர்கள் வீணாகின்றனர். இதற்கு யாரை குற்றம் சொல்வது என்று தெரியவில்லை. 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது மிகப்பெரிய கொடுமையாகும். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இதுபோல இல்லை. தேவகவுடா பிரதமராக இருந்தபோது எம்.பி.க்களின் ஆதரவு தேவையிருந்ததால் அப்போது தமிழக எம்.பி.க்களுக்கு மதிப்பு இருந்தது. தற்போது மதிப்பு இல்லை. குடியுரிமை சட்டத்திருத்தம் தேவையில்லாத ஒன்று. இவ்வாறு திவாகரன் தெரிவித்தார்.

Related Stories: