ஆபத்தான நிலையில் தொங்கும் மின்வயர் மின்வாரிய அதிகாரிகளின் மெத்தனத்தால் இருளில் தவியாய் தவிக்கும் பொது மக்கள்: புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

ராஜாக்கமங்கலம்: ஆசாரிபள்ளம் அருகே மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய போக்கால் கடந்த 2 நாளாக பொது மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

ஆசாரிபள்ளம் அருகே வேம்பனூரில் அங்கன்வாடி மையம் உள்ளது. இதன் அருகே சேதமடைந்த மின்கம்பம் ஒன்று நின்றது. குழந்தைகள் மற்றும் பொது மக்களின் நலன் கருதி உடனே இந்த மின்கம்பத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக அந்த பகுதி பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு புகார்கள் கொடுத்தனர்.ஆனால் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. புகார் மனுக்களும் என்ன ஆனது என்று தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் நின்ற ஒரு மரம் முறிந்து சேதமடைந்து காணப்பட்ட மின் கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின் கம்பம் முறிந்து விழுந்தது. மின் வயர்களும் தரையில் உரசி கொண்டு இருக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள், பொது மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சம் நிலவியது. இதையடுத்து அந்த பகுதி பொது மக்கள் உடனடியாக அனந்தம்பாலத்தில் உள்ள மின்வாரிய பிரிவு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் மின் வாரிய அதிகாரிகளோ வழக்கம் போல் எதை பற்றியும் கவலைப்படவில்லை. பொது மக்களின் புகாரையும் கண்டு கொள்ளவில்லை. தற்போது மின் வயர்கள் அறுந்தும், மின் கம்பம் முறிந்து விழுந்தும் 2 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அந்த பகுதி கடந்த 2 நாட்களாக இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மின் வாரிய அலுவலகத்தில் புகார் கொடுத்து உள்ளதால் சீரமைக்க ஊழியர்கள் இன்று வருவார்கள்? நாளை வருவார்கள் என்று வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.

அந்த பகுதியில் சூழ்ந்துள்ள இருள் எப்போது விடியும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இந்த பகுதியிலும் மேலும் 2 மின்கம்பங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன. இந்த மின் கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழலாம்? என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே மின்வாரிய அதிகாரிகள் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக காணப்படும் 2 மின்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.உங்கள் பகுதியில் மின் தடையா? மின் வினியோகத்தில் குறைபாடா? உடனே தகவல் கொடுங்கள் என்று விளம்பரம் செய்யும் மின்வாரிய அதிகாரிகள் பொது மக்களின் புகார்களை கிடப்பில் போடுவது ஏன் என்பது தெரியவில்லை. ஆகவே பொது மக்களின் கஷ்டங்களை அறிந்து மின்வாரிய அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

விடுத்துள்ளனர்.

Related Stories: