டெல்டாவுக்கு 150 டிஎம்சி நீர் திறப்பு மேட்டூர் அணை நாளை மூடல்

மேட்டூர்: மேட்டூர் அணை மூலம் டெல்டா மாவட்டங்களில், 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஜூன் 12ம் தேதி முதல், ஜனவரி 28ம் தேதி வரை காவிரி டெல்டா பாசனத்திற்காக மொத்தம் 330 டிஎம்சி நீர் திறக்கப்படும். கடந்தாண்டு ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணையின் நீர் இருப்பும்- வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், நீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, 2 மாதம் தாமதமாக ஆகஸ்ட் 13ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதுவரை, 150 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஜனவரி 28ம் தேதி(நாளை) தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட வேண்டும். அதேவேளையில், அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருக்கும்பட்சத்தில், விவசாயிகள் கோரிக்கை விடுத்தால் நீர் திறப்பு 2 வாரம் நீட்டிக்கப்படும். ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்துள்ளதால், மேட்டூர் அணையில் நீர் திறப்பு விநாடிக்கு 2000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பது நாளை நிறுத்தப்படும் என தெரிகிறது. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து  நேற்று காலை 484 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 2,000 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.  நேற்று முன்தினம் 107.90 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 107.79 அடியாக சரிந்தது.

Related Stories: