மங்களூரு விமான நிலையத்தில் பயங்கர வெடிகுண்டு கண்டெடுப்பு : பெரிய அசம்பாவிதம் தவிர்ப்பு

பெங்களூரு: மங்களூரு விமான நிலையத்தில் தீவிரவாதிகள் வைத்திருந்த பயங்கர  வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. மேலும், மங்களூருவில் இருந்து ஐதராபாத்துக்கு  சென்ற விமானத்தில் மற்றொரு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு  தினத்தையொட்டி தீவிரவாத செயல்களை செய்ய 300க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள்  இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். எனவே, மாநில அரசு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்நிலையில்,  மங்களூரு விமான நிலையத்தில் இண்டிகோ விமானங்களுக்கு டிக்கெட் முன்பதிவு  செய்யும் கவுன்ட்டர் உள்ளது. நேற்று காலை சுமார் 8.45 மணி அளவில் அங்கு ஒரு  கறுப்பு நிற லேப்டாப் பை இருந்தது. அந்த பை மீது போலீசாருக்கு சந்தேகம்  ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மத்திய  தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பையை மீட்டனர். பின்னர், வெடிகுண்டு  நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள்  லேப்டாப் பையை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். அப்போது பையில் 10  கிலோ எடை கொண்ட வெடிகுண்டு இருந்தது தெரியவந்தது.

உடனே, பாதுகாப்பு கவச வாகனம் கொண்டு வரப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் வெடிகுண்டை ஒரு பையில் வைத்து வாகனத்தில் வைக்கப்பட்டது.

பின்னர்  அதை செயலிழக்கச் செய்வதற்காக விமான நிலையத்திலிருந்து சுமார் 3 கிமீ தூரம்  உள்ள கெஞ்சாறு  மைதானத்திற்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. அதை  செயலிழக்கச் செய்ய முடியாததால், அதை வெடிக்க வைப்பதற்காக முயற்சிகள்  நடந்தது. 2 முறை முயற்சி தோல்வி அடைந்தாலும், மாலை 5.37 மணிக்கு 3வது முறை  நடந்த முயற்சியில் வெடிகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் பாதுகாப்பு  படையினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த பரபரப்புக்கு இடையே,  விமான நிலைய கண்ட்ரோல்   அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. அதில்  பேசிய நபர் மங்களூருவில் 3   இடங்களில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக  தெரிவித்தார். இதனால், விமான நிலைய   பாதுகாப்பு அதிகாரிகள் வெடிகுண்டுகளை  கண்டறியும் பணியை முடுக்கிவிட்டனர்.  

இந்நிலையில்  நேற்று பகல் 1.30  மணிக்கு மங்களூருவில் இருந்து  ஐதராபாத்துக்கு இண்டிகோ  விமானம்  புறப்பட்டது. அதில், வெடிகுண்டு இருப்பதாக  தகவல்கள் வெளியானது.  உடனே  பாதுகாப்பு அதிகாரிகள் விமானியை எச்சரித்து  விமானத்தை அவசர அவசரமாக  கீழே  இறக்கினர்.

பின்னர் வெடிகுண்டு  நிபுணர்கள் வர வழைக்கப்பட்டனர்.   இவர்கள் விமானத்தில் ேசாதனை மேற்கொண்டு  வெடிகுண்டை கண்டுபிடித்தனர்.  முதலில் கண்டெடுக்கப்பட்ட  வெடிகுண்டை  போலவே இந்த இரண்டாவதாக  கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டையும்  செயலிழக்க வைப்பதா  அல்லது வெடிக்க வைப்பதா  என்பதில் வெடிகுண்டு  நிபுணர்கள் தீவிரமாக ஆலோசனை  மேற்கொண்டனர்.  விமானத்தில் தக்க நேரத்தில்  வெடிகுண்டு  கண்டுபிடிக்கப்பட்டதால் அதில்  பயணித்த 120 பயணிகள் உயிர்  தப்பினர் என்பது  குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே  இரண்டாவது வெடிகுண்டு   கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மூன்றாவது வெடிகுண்டு  எங்கு உள்ளது என்பதை   கண்டறியும் பணியில் போலீசாரின் உதவியுடன் வெடிகுண்டு  நிபுணர்கள் தீவிரமாக   ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆட்டோவில் வந்த மர்ம ஆசாமி

வெடிகுண்டு  வைக்கப்பட்ட லேப்டாப் பையை நேற்று காலை 8.45 மணி அளவில் ஒருவர் கொண்டு  வந்துள்ளார். இதை விமான நிலைய டிக்கெட் கவுன்ட்டர் அருகே பயணிகள் அமரும்  இடத்தில் வைத்துள்ளார். வைத்த உடனே அந்த ஆசாமி வந்த ஆட்டோவிலேயே திரும்பவும் அங்கிருந்து புறப்பட்டு சென்ற காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளது. லேப்டாப் பையை கொண்டு வந்தவர், தொப்பி அணிந்துள்ளார் என்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது.  வெடிகுண்டு வைத்தவரை கண்டறிய போலீசார்  முடுக்கிவிடப்பட்டுள்ளனர்.

Related Stories: