பாதாளச் சாக்கடை பணி என்ற பெயரில் சாலையை நாசப்படுத்தும் நகராட்சி: விருதுநகரில் பொதுமக்கள் குற்றச்சாட்டு

விருதுநகர்: விருதுநகரில் பாதாளச் சாக்கடை பணி என்ற பெயரில், சாலைகளை நகராட்சி நிர்வாகம் தோண்டி நாசம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் மூலம் 620 கி.மீ ரோடுகள் ரூ.611 கோடியில் போடப்பட்டு வருகின்றன. இதில், விருதுநகரின் நுழைவுப் பகுதியில் உள்ள கச்சேரி ரோட்டில் சுமார் ஒன்றரை கி.மீ தூரத்திற்கு மூன்று அடுக்காக தடுப்புச்சுவர் (சென்டர் மீடியன்) கடந்த 2 மாதங்களாக போட்டு முடிக்கப்பட்டது. அப்போது இந்த சாலையில் உள்ள பாதாளச்சாக்கடை மேன்ஹோல்களை உயர்த்தி தரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகம் தனது தரப்பில் உயர்த்தி தரவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் ரோடு பணி முழுமையாக முடிக்கப்பட்டது.

இந்நிலையில், சாலை உயரத்திற்கு மேன்ஹோல்களை உயர்த்துவதாக கூறி நகராட்சி நிர்வாகம் ரோட்டை தோண்டி நாசம் செய்வதாக நகர் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சாலையில் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், தீயணைப்பு நிலையம், மத்திய, மாநில அரசுகளின் பொதுத்துறை நிறுவனங்கள், 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளிகள் உள்ளன.

மதுரையில்  இருந்து வரும் மற்றும் விருதுநகரில் இருந்து செல்லும் அரசு, தனியார் பஸ்கள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் போக்குவரத்து ஒருபகுதியில் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து சிக்கலும், தோண்டிய பள்ளத்தில் டூவீலரில் செல்வோர் விழுந்து காயப்படும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகிறது.

ரோடு போட்டு முடிக்கப்பட்ட நிலையில், ரோட்டை தோண்டி நாசம் செய்வதால் பழையபடி குண்டும், குழியுமான ரோட்டில் மக்கள் வரும் 5 ஆண்டுகளுக்கு செல்ல வேண்டிய நிலை அவலநிலை உருவாகி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: