ஃபேஸ்புக் கணக்கு இருக்கா..? உடனே இதைப் படிங்க!

நன்றி குங்குமம்

சுமார் 245 கோடிப்பேர் உலாவுகின்ற ஓர் இடம் ஃபேஸ்புக். அதே நேரம் 300 கோடிக்கும் அதிகமான போலிப் பயனாளர்கள் சுற்றித்திரிகிற ஓர் இடமும் ஃபேஸ்புக்தான். புது நண்பர்கள், கருத்து மற்றும் ரசனை பரிமாற்றங்கள், ஆரோக்கியமான விவாதங்கள் என ஏராளமான ப்ளஸ் இருந்தாலும் ஃபேஸ்புக்கில் ஆபத்துகளும் இருக்கின்றன.

அதனால் உடனடியாக கீழ்வரும் விஷயங்களை ஃபேஸ்புக்கில் இருந்து நீக்குங்கள் என்று டெக் வல்லுநர்கள் எச்சரிக்கை செய்திருக்கின்றனர்.

ரிலேசன்ஷிப் ஸ்டேட்டஸ்ஃபேஸ்புக் மாதிரியான சமூக வலைத்தளத்தில் ‘நான் கல்யாணமானவர், காதலில் இருப்பவர், பிரிந்து இருப்பவர்’ போன்ற உங்களின் உறவு ரகசியங்களை வெளிப்படையாக தெரிவிப்பது அவ்வளவு அவசியமானது இல்லை. தவிர, உங்களின் டேட்டிங் வாழ்க்கையை அங்கே பதிவிடுவதும் நல்லதல்ல. இதனால் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு பிரச்னைகள் வர வாய்ப்பிருக்கிறது.

குழந்தைகளின் புகைப்படங்கள்

உங்களின் குழந்தைகள் மற்றும் நண்பர்கள், உறவினர், தெரிந்தவர்களின் குழந்தைகள் என எந்தக் குழந்தையின் புகைப்படத்தையும் ஃபேஸ்புக்கில் பகிர வேண்டாம். இது குழந்தைகளைக் கடத்துபவர்களுக்கு சாதகமாகிவிடும்.

குழந்தை படிக்கும் பள்ளி

நிறைய பெற்றோர்கள் பெருமைக்காக தங்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி, அவர்களின் தனித்திறமைகளை புகைப்படம் மற்றும் வீடியோவாக்கி லைக்குகளுக்காக பதிவிடுகின்றனர். இது குழந்தை கடத்துபவர்களுக்கு நீங்களே வழிகாட்டுவதைப் போல அமையும்.

குடிக்கும் புகைப்படங்கள்

உங்களின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வேலை செய்யும் நிறுவனத்தினர் என எல்லோரும் இருக்கும் இடம் இது. அங்கே மது பாட்டிலுடனோ அல்லது ஏதாவது பார்ட்டியில் இருப்பது மாதிரியோ பலரும் புகைப்படங்களைப் பகிர்கின்றனர். ஜாலிக்காக இதைப் பகிர்ந்தாலும் இந்தப் புகைப்படங்கள் உங்கள் மீதான மரியாதையை சீர்குலைக்கும். தெரியாதவரை இணைக்க வேண்டாம்.நீங்கள் கொஞ்சம் பிரபலமாகும்போது நிறைய நண்பர் வேண்டுகோள் வரும். அதில் தெரியாத நபர்களையும் இணைத்துக்கொள்வோம். இதை முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள்.

கார்டு தகவல்கள்

ஃபேஸ்புக்கில் நிறைய விளம்பரங்கள் வரும். அவற்றில் பிடித்ததைக் கிளிக் செய்து ஷாப்பிங் செய்வது பலரின் வழக்கம்.

அப்படி ஷாப்பிங் செய்யும்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தகவல்கள் பதிவாக வாய்ப்பிருக்கிறது. அதனால் ஷாப்பிங் முடிந்தவுடன் கார்டுகளின் தகவல்களை உடனடியாக நீக்கிவிடுங்கள்.

போன் நம்பர்

நீங்கள் தெருவில் நடந்து செல்கிறீர்கள். எதிரே வருவோர் போவோர் எல்லோரிடமும் உங்களின் போன் நம்பரைத் தருவதைப் போன்றதுதான் ஃபேஸ்புக்கில்  நம்பரைப் பகிர்வது. இன்று போன் நம்பரை வைத்தே உங்களின் அனைத்து தகவல்களையும் திருட முடியும். உஷாராக இருங்கள்.

டேக்கை தவிருங்கள்

நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களை டேக் செய்யலாம். டேக் செய்யப்பட்டிருக்கும் பதிவு முக்கியமாக இருந்தாலும் அதைப் பார்த்துவிட்டு டேக்கை நீக்கிவிடுங்கள். இல்லையென்றால் அந்த டேக் மூலம் அந்நியர் ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்ள வாய்ப்பிருக்கிறது.

பிறந்த நாள்

பெரும்பாலானவர்கள் தங்களின் பிறந்த நாளைக் குறிப்பிட்டிருப்பார்கள். பிறந்த நாளன்று முகமறியாத பலரின் வாழ்த்துகள் உங்களைக் குஷிப்டுத்தலாம்.

ஆனால், பிறந்த நாளை வைத்தே உங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டுவதற்கு தொழில்நுட்பம் வந்துவிட்டது. பிறந்த நாளைக் குறிப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.

இதுபோக நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களையும் தவிருங்கள். உதாரணத்துக்கு இந்த தியேட்டரில் இந்தப் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அடுத்து நீங்கள் பயணம் போகும் இடங்களைப் பற்றிய தகவல்கள், அங்கே எடுக்கும் புகைப்படங்கள், பயணத்துக்கான திட்டங்களை ஃபேஸ்புக்கில் வெளிப்படுத்தாதீர்கள். அது உங்களின் வீடு காலியாக இருக்கிறது, வீட்டில் யாருமே இல்லை என்பதை மறைமுகமாக தெரிவிக்கிறது!              

த.சக்திவேல்

Related Stories: