பொய்களை கூறி சிறுபான்மையினர் தவறாக வழி நடத்தப்படுகின்றனர் : ராகுல், பிரியங்கா மீது அமித்ஷா குற்றச்சாட்டு

புதுடெல்லி: தேசிய குடியுரிமை சட்டம் தொடர்பாக பொய்களை கூறி, சிறுபான்மையினரை ராகுல் காந்தியும், பிரியங்காவும் தவறாக வழி நடத்துவதாக பாஜ தலைவர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 8ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 11ம் தேதியும் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று அறிவித்தார்.இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சரும் பாஜ தலைவருமான அமித்ஷா பேசியதாவது:

தேசிய குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த வன்முறைகள், அதனால் ஏற்பட்ட அமைதியின்மை ஆகியவற்றுக்கு ராகுல் காந்தியும், மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுமே காரணமாவார்கள். இதற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு ராகுல் காந்தி ஆதரவளித்தது அனைவருக்கும் தெரியும். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வந்த சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படி குடியுரிமை அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது.

ஆனால் காங்கிரசும் ஆம் ஆத்மியும், அதிலும் குறிப்பாக ராகுலும், பிரியங்காவும் சிறுபான்மையினரின் குடியுரிமை பறிக்கப்படுவதாக தவறாக வழி நடத்துகின்றனர். இந்த திருத்தப்பட்ட சட்டத்தில் மக்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்று எங்கும் கூறப்படவில்லை. அவர்கள் ஏன் பொய் கூறுகின்றனர் என்று தெரியவில்லை. டெல்லி மக்களையும் சிறுபான்மையினரையும் தவறாக வழி நடத்தி, தலைநகரை தீக்கிரையாக்கிய பாவச் செயலை புரிந்துள்ளனர். ஆனால் வெட்கமில்லாமல், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு சட்ட உதவியும் பாதுகாப்பும் அளித்து வருகின்றனர்.

Related Stories: