தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி வரை நடைபெறுகிறது : சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு

சென்னை : தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் வரும் 9ம் தேதி வரை நடத்த சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கவர்னர் பன்வாரிலால் உரையுடன் இன்று துவங்கியது. கவர்னர் உரையை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பாக பேசிய சபாநாயகர் தனபால், வரும் 9ம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதைத் தொடர்ந்து நாளை காலை 10 மணிக்கு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்படும். இதன் பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவை கூடக்கூடிய ஒவ்வொரு நாட்களிலும் காலை 10 மணிக்கு அவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். அதில் சட்டமன்ற உறுப்பினர் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பர். இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், புதன்கிழமை மதியம் வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. அன்றைய விவாதத்தில்  எதிர்க்கட்சித் தலைவர் பேசுவார். அதனைத் தொடர்ந்து கடைசி நாளான வியாழக்கிழமை அன்று முதல்வர் பதிலுரை, சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்று சபாநாயகர் கூறினார். பேரவைக் கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை (ஜன. 10) வரை நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில் ஒரு நாள் முன்கூட்டியே கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது.

Related Stories: