இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை: குடியுரிமை சட்டம் திருத்தம் தொடர்பாக தனிநபர் தீர்மானம்...பேரவை செயலாளரிடம் மு.க.ஸ்டாலின் மனு

சென்னை: தமிழக சட்டப்பேரவை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் கூடுவது வழக்கம். அதன்படி இந்தாண்டின் முதல் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்   உரையாற்றுவார். இந்த உரையில், தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகள் இடம்பெறும். புதிய அறிவிப்புகளும் அதில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. கவர்னர் படித்து முடித்ததும் உரையை தமிழில் சபாநாயகர் தனபால்   படிப்பார். அவர் உரையாற்றியதும் இன்றைய கூட்டத் தொடர் முடிவடையும்.

இதையடுத்து சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெறும். இதில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை கூட்டத்தை நடத்துவது என்பது முடிவு செய்யப்படும். இன்று கூடும் பேரவை கூட்டம் 10ம் தேதி வரை   தொடர்ச்சியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி மத்திய அரசை வலியுறுத்தி  தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் கடிதம் கொடுத்துள்ளார். இந்நிலையில், குடியுரிமை சட்டம் திருத்தம் தொடர்பாக தனிநபர் தீர்மானம் கொண்டு வர திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான  மு.க.ஸ்டாலின் பேரவை செயலாளரிடம் மனு அளித்துள்ளார். தீர்மானம் நிறைவேற்றவில்லை என்றால் ஆளுநர் உரையை புறக்கணிக்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கேரள சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்:

இதனிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப்பேரவையில் கடந்த டிசம்பர் 31-ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்தார். இது தொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கையில், கேரள சட்டசபையில், முதல்வர் பினராயி விஜயன் , பா.ஜ., அரசின் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தது வரவேற்கிறது. இது மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கிறது. அரசியல்  சட்டத்தின் அடிப்படை அம்சங்களை போற்றி பாதுகாக்கும் இந்த பணியை ஒவ்வொரு மாநில சட்டசபையும் நிறைவேற்ற வேண்டும் என்பது தான் நாட்டு மக்களின் பெரு விருப்பமாக இருக்கிறது.

ஆகவே, வரும் ஜன., 6ல் கூடும் தமிழக சட்டசபை கூட்டத்தில் இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இ.பி.எஸ்., தீர்மானம் கொண்டு வந்து  நிறைவேற்ற வேண்டும் என திமுக சார்பில் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அந்த ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related Stories: