இன்று(டிச.27) லூயி பாஸ்டர் பிறந்த தினம் மனித தலையெழுத்தை மாற்றி எழுதியவர்...

ஒரு சில அறிவியல் மற்றும் மருத்துவரீதியிலான கண்டுபிடிப்புகள், பல மர்ம மனித மரணங்களுக்கான தலையெழுத்தையே மாற்றி அமைத்திருக்கின்றன. அப்படி ஒரு கண்டுபிடிப்பால் அன்று முதல் இன்று வரை வரலாற்றில் இடம் பிடித்தவர் ‘நுண்ணுயிரியலின் தந்தை’ என அழைக்கப்பட்ட லூயி பாஸ்டர். வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசியை கண்டறிந்து பல லட்சம் பேர் உயிரிழப்பை தடுத்து நிறுத்தியவர்.

அவரைப்பற்றி தெரிந்து கொள்வோமா?

பிரான்ஸில் உள்ள டோல், ஜூரா என்ற இடத்தில் ஜோசப் பாஸ்டர் - எடியன்னிடி ரவுகி தம்பதிக்கு 1822ம் ஆண்டு, டிச.27ம் தேதி மகனாக பிறந்தவர் லூயி பாஸ்டர். பள்ளிக்காலங்களில் லூயி பாஸ்டருக்கு மீன் பிடித்தல், ஓவியம் வரைதலில் மட்டுமே ஆர்வமாக இருந்தது. படிப்பு என்றால் பல கிமீ தூரம் ஓடும் மாணவராகத்தான் இருந்தார். பள்ளியை தாண்டி கல்லூரி வாசலில் கால் தடம் பதித்தார். 1839ம் ஆண்டில் மெய்யியல் படிப்பதற்காக ராயல் டி பெசன்கான் கல்லூரிக்கு சென்றார். அங்கு இளநிலை படிப்பில் சிறப்புப் பாடமாகக் கணிதவியலைக் கொண்ட அறிவியல் பட்டம் பெற்றார். அக்கல்லூரியிலே பேராசிரியராகவும் பணியாற்றினார். பின்னர்தான் அறிவியல் ஆய்வு பக்கம் லூயி பாஸ்டரின் கவனம் திரும்பியது.

அப்போது மனிதர்கள் எதற்காக இறக்கிறோம் என தெரியாமல் கொடூரமான முறையில் உயிரிழந்து கொண்டிருந்தனர். ராபர்ட் ஹூக் என்பவர் நுண்ணுயிரிகளை, மைக்ராஸ்கோப்பில் கண்டிருந்தாலும் நோய்களுக்கு இந்தக் கண்ணுக்கு தெரியாத ஜீவன்கள் காரணம் என யாரும் நினைக்கவில்லை. எனவே, நுண்ணுயிரிகளை பற்றி  ஆராய்ச்சியில் பாஸ்டர் ஈடுபட்டார். முதல்கட்டமாக மனித உடலில் நோய்களை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் பற்றி ஆராய்ந்தார். அதுகுறித்து நுண்ணுயிரி கோட்பாட்டையும் வெளியிட்டார். குறிப்பிட்ட வெப்பநிலையில் வாழும் அவற்றைக் கட்டுப்படுத்த வெப்பநிலையை மாற்ற வேண்டும் எனக்கூறினார். பாலை கெடாமல் காக்க நன்றாக சூடாக்கி உடனடியாகக் குளிர வைக்கும் முறையும் இவர் உருவாக்கியது தான்.

அக்காலத்தில் வெறிநாய் கடித்தால், நாய் போலவே இளைப்பு, தண்ணீரை கண்டால் தெறித்து ஓடும் மனநிலையோடு இருந்த பலர், நாளடைவில் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். கிட்டத்தட்ட பல்லாயிரக்கணக்கானோர் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருந்தனர். இதனைக்கண்ட பாஸ்டருக்கு இதற்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் இறங்கினார். இதற்காக பல நாய்களின் பின்பு உயிரை பணயம் வைத்துத் திரிந்தார். அவற்றின் எச்சிலில் இருக்கும் கிருமிகளே நோய்க்கு காரணம் என்பதை உணர்ந்தார். இதற்கு நாயின் உமிழ் நீரையே மருந்தாக பயன்படுத்தி, நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவனில் உடலில் செலுத்தினார். 15 நாட்களுக்குள் அந்த சிறுவன் குணமானார். இப்படித்தான் ராபிஸ் நோய்க்கு எதிரான தடுப்பூசி உருவானது. அவரின் ஆய்வு முறையே தற்போது வரை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அப்போது ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி பல்லாயிரக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்தன. மருத்துவத்துறைக்கு பெரும் சவாலாக இருந்த ஆந்த்ராக்ஸ் நோயை  உண்டாக்கும் கிருமிகளைக் கொன்று, மீண்டும் அவற்றை மிருகங்களின் உடம்பில் செலுத்தி சாதித்தார் பாஸ்டர். இதுபோல ஐரோப்பிய நாடுகளில் பட்டுப்புழுக்களை  அழித்து வந்த நுண்ணுயிரிகளையும் அழித்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. எத்தனையோ பேர் ஆச்சரியப்படும் வகையிலான கண்டுபிடிப்புகளை உலகிற்கு அர்ப்பணிக்கின்றனர். ஆனால், உலக அளவில் நிகழ்ந்த பெரும் உயிர்ப்பலிகளை, தடுத்து நிறுத்தி மனித தலையெழுத்தையே மாற்றி அமைத்தவர் லூயி பாஸ்டர். அதனால்தான் அவரை உலகம் போற்றி வணங்குகிறது.

Related Stories: