போலீஸ் சேனல்

தொடர்பு எல்லைக்கு வெளியே சிறை அதிகாரிகள்:

வேலூர் மத்திய சிறையில் 750க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பெண்கள் தனிச்சிறையில் 250க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சமீபத்தில் வேலூர் சிறைகளில் முக்கிய குற்றவாளிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அதோடு சிறைக்குள் கைதிகள் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் செல்போன் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு சிறை அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருக்கின்றனராம். இதுகுறித்து சிறை டிஐஜி, கண்காணிப்பாளர் இருவரையும் தொடர்பு கொண்டால் இருவரும் செல்போன்களை எடுப்பதில்லையாம். போனை எடுக்காமல் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது போல் காட்டிக் கொள்கின்றனராம்.

இதன் மூலம் வேலூர் சிறைகளில் நடக்கும் பல சம்பவங்களை வெளியே தெரியாமல் மூடி மறைத்து விடுகின்றனர். அதிகாரிகளின் செல்போன் எடுப்பதில்லை என்று சிறை அலுவலக லேண்ட் லைன் எண்ணிற்கு தொடர்பு கொண்டால் அந்த எண்ணில் பேசும் காவலர்கள் எதுவும் தெரியாது என கூறி அழைப்பை துண்டித்து விடுகின்றனராம்.

மைக்கில் கமிஷனர் அலர்ட்: மலைக்கோட்டை காக்கிகள் புலம்பல்:

திருச்சி மலைக்கோட்டை மாநகர் போலீஸ் கமிஷனராக மத்திய மண்டல ஐஜி வரதராஜூ பொறுப்பேற்றார். அவரது பொறுப்பிற்கு மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த அமல்ராஜ் சென்றார். வரதராஜூ, மத்திய மண்டலத்திற்கு முன் சென்னையில் நுண்ணறிவு பிரிவு ஐஜியாக இருந்தார். அவர் இங்கு தினமும் குறைந்தது 7க்கும் மேற்பட்ட முறை போலீஸ் மைக்கில் பேசி காவலர்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் மற்றும் கட்டளைகளை பிறப்பித்து அதனை பாலோஅப் செய்து பதில் கேட்டு வருகிறார். அவரை தொடர்ந்து துணை கமிஷனர்கள் பேசுகின்றனர். இதனால் மைக் 3 டூ கன்ட்ரோல் என்றால் மாநகரில் உள்ள உதவி கமிஷனர்கள் முதல் காவலர்கள் வரை அனைத்து போலீசாரும் மைக்கை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

மைக்கின் சவுண்டை குறைக்க முடியாமல் கமிஷனர் எப்போது என்ன பேசுவார் என்பது தெரியாமல் போலீசார் டென்ஷனாகவே உள்ளனர். இதற்கு முன் இருந்த கமிஷனர்கள் வாரத்திற்கு ஒன்று அல்லது 2 முறை மைக்கில் பேசுவார்கள். ஆனால் தற்போதைய கமிஷனர் தினமும் மைக்கில் பேசுவதால் அயர்ந்து சோம்பல் முறிக்க முடியவில்லை என கோரஸாக புலம்புகின்றார்களாம் போலீசார்.

வெளியே சீட்டாட்டம்...உள்ளே ‘சிட்டாட்டம்...’

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், போடி, பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி என 5 சப்-டிவிஷன்களில், 30க்கும் அதிக காவல்நிலையங்கள் உள்ளன. இங்கெல்லாம் போலீசாருக்கு மாமூல் அள்ளி தரும் அமுதசுரபிகள் அனுமதியில்லாத பார்களும்... சீட்டாட்ட கிளப்களும்தான். ஆளுங்கட்சி பவர்ல இந்த அனுமதி, அனுமதியற்ற பார்கள் வரைமுறை மீறி ஓடுதாம். இதுல தமிழக - கேரள எல்லைப்பகுதியில நடத்துற பார்கள் இன்னும் ‘ஆளுங்கட்சி முழு ஆதரவோடு’ சர்வ சுதந்திரத்துல செயல்படுதாம். இதேபோல் மாவட்ட அளவில போலீசாருக்கு தெரிஞ்சே சீட்டாட்ட கிளப்கள் 30க்கும் அதிகமாக ஓடுதாம்.

இதுல திறந்தவெளி சீட்டாட்டத்திற்கும் மாவட்ட அளவில் பஞ்சமே இல்லையாம். பெயருக்குத்தான் ‘சீட்டாட்ட கிளப்’ என்றாலும்... உள்ளே ‘பலான’ செயல்களும் நடக்கிறது என்கின்றனர். இதையும் கடந்து, கம்பம், போடி, தேனி பகுதிகளில் ஹைடெக் விபச்சார கும்பல்களோட அட்டகாசமும் அதிகமாகி வருதாம். எஸ்.பி. தனிப்பிரிவு, எஸ்.பி. சி.ஐ.டி., இது தவிர இதற்கென்றே இருக்கிற சிறப்பு தடுப்பு போலீசாருக்கு தெரியாமலா இதெல்லாம் நடக்கிறது என்று பொதுமக்கள் மத்தியிலிருந்து கேள்விகள் அதிகரித்துள்ளன.

நெல்லுக்கு பாயுறது  புல்லுக்கும் பாயட்டும்...!

ஈரோடு சப்-டிவிசன் எல்லைக்குள், ஈரோடு டவுன், வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம், ஈரோடு தாலுகா, அரசு தலைமை மருத்துவமனை, சூரம்பட்டி, மொடக்குறிச்சி ஆகிய 7 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. இந்த ஸ்டேஷன்களில் பணியாற்றி வரும் போலீசாருடன், இரவு ரோந்து பணியில், ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ என்னும் நண்பர்கள் குழுவும் சேர்ந்துகொள்கிறது. இக்குழுவினருக்கு, ஊதியம் ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை. அதனால், இக்குழுவினர், போலீசாருடன் இணைந்து, அன்றாடம் ஊதியம் பெறுகிறார்கள். தினசரி இரவு ரோந்து செல்லும் போலீசார், இவர்களையும் உடன் அழைத்துச்சென்று, வாகன சோதனை என்ற பெயரில் காசு பார்த்து, தங்கள் பாக்கெட்டை நிறைத்துக்கொண்டு, இவர்களது பாக்கெட்டுக்கும் வழி திறந்து விடுகின்றனர்.

அந்தந்த ஆய்வாளர் மேற்பார்வையில் இந்த வசூல் வேட்டை நடக்கிறது. ஊதியம் என்ற பெயரில், ஒரு நபருக்கு தினசரி 400 ரூபாய் வழங்குகின்றனர். அரசு சார்பில் எவ்வித நிதியும் ஒதுக்காவிட்டாலும், நாங்களே ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ குழுவை கவனித்துக்கொள்கிறோம் என்கிறார்கள் ஈரோடு போலீசார். ‘’சரி... சரி... நெல்லுக்கு பாயுறது... சிறிது புல்லுக்கும் பாயட்டுமே...!’’ என்கிறார்கள் ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ குழுவினர்.

பெண் அதிகாரியால் அலறும் எஸ்.பி., ஆபீஸ் ஊழியர்கள்:

முட்டைக்கு பேமசான மாவட்டத்தில் எஸ்பி ஆபீசில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் பெண் அதிகாரியின் அலம்பல்கள் தாங்க முடியாமல் ஊழியர்கள் அலறி ஓடுறாங்களாம். அந்த அதிகாரி பத்து வருஷத்துக்கும் மேலாக பணியாற்றும் இந்த ஆபீசில் கடைநிலை ஊழியர்கள் யாருமே, அதிகபட்சம் 2வருடத்திற்கு மேல் வேலை செய்யவில்லையாம். போலீசார் ேகட்கும் தகவல்கள், கடிதங்கள் என்று எது ேமஜையை விட்டு நகர வேண்டும் என்றாலும் இந்த அதிகாரி கண் அசைத்தால் மட்டுமே முடியுமாம். இவரை மீறி யாராவது தலையெடுத்தால் உடனடியாக அவர் மீது, கண்டிப்பாக ஏதாவது ஒரு ரூபத்தில் புகார் வந்துவிடுமாம். அதிகாரியின் தனி உதவியாளர் டார்ச்சர் தாங்க முடியாமல், வேலையே வேண்டாம் என்று ஓட்டம் பிடித்த சம்பவமும் நடந்துள்ளது.

இப்படிப்பட்ட நிலையில் அதிகாரியால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒரு குரூப்பா சேர்ந்து எஸ்பியிடமும் குமுறலை ெகாட்டி தீர்த்தாங்களாம். அவர் ‘வானிங்’ செய்து மட்டும் அனுப்பி விட்டாராம். இதனால் சில நாட்கள் மட்டும் அமைதியாக இருந்த அதிகாரியின் அலம்பல், தற்போது விஸ்வரூபம் எடுத்திருக்காம். இதனால் நொந்து போன ஊழியர்கள், அவரது கொட்டத்தை அடக்க, அதிரடியாக என்ன செய்யலாம்? என்று அடிக்கடி கூடி பேசிக்கிட்டு இருக்காங்களாம்.

பக்கத்து ஊருக்கு போலீஸ் அட்வைஸ்:

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு சமீபத்தில் மாவட்ட நீதிபதி ஆய்வுக்கு வந்தார். அப்போது வழக்குகள் அதிக அளவில் தேங்கியுள்ளதால், விரைவில் முடித்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார். வேடசந்தூர் காவல் நிலையத்தில் மேற்கொண்ட ஆய்வில் ஆண்டுக்கணக்கில், பல வழக்குகளுக்கு ‘சார்ஜ் சீட்’ போடாமல் இருந்திருக்கிறது. இந்த அறிவுறுத்தலைத் தொடர்ந்து, தற்போது போலீசார், ஒவ்வொரு இடத்திற்கும் தேடிச்சென்று உரிய வழக்குப்பதிவுகள், சார்ஜ் சீட் பதிவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனராம்.  சில போலீசார் தங்கள் கைப் பணத்தை செலவு செய்து நீதிமன்ற பதிவுக் கட்டணத்தையும் கட்டிக் கொண்டிருக்கின்றனராம். முன்பிருந்த அதிகாரிகள் வழக்குகளை முறையாக பதிவு செய்து, அதற்கான பணிகளை முடித்திருந்தால் இன்று தங்களுக்கு இந்த ‘டென்ஷன்’ இல்லையென்று புலம்பித் தவிப்பதுடன், தாங்கள் பார்க்கும் பக்கத்து ஊர் போலீசாரிடம் எல்லாம், ‘‘ஸ்டேஷன்ல வழக்குகளை தேங்க விட்டுறாதீங்க.. முடிஞ்ச அளவுக்கு முடிச்சுடுங்க.. பாவம்... அடுத்து வர்றவங்க அவதிப்படுவாங்க’’ என்று அட்வைசும் செய்து வருகிறார்களாம்.

எல்லைக்காவல் - குஷியோ, குஷி...!

தமிழக-கேரளா எல்லையான கோவை வாளையார், வேலந்தாவளம், மீனாட்சிபுரம், ஆனைகட்டி, ேகாபநாரி, தோலம்பாளையம், பில்லூர் பகுதியில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன. அதேநேரம், கேரள மாநில எல்லைக்குள், தமிழக எல்லையை ஒட்டியபடி, ‘டூடி ஷாப்’ என்ற பெயரில் கள்ளுக்கடைகள் நிறைய செயல்படுகின்றன. தமிழக ‘’குடி’’மகன்கள் டாஸ்மாக் சரக்கு வாங்கி, கேரளாவுக்குள் செல்வதும், கேரளா ‘’குடி’’மகன்கள் அங்குள்ள கள் பாக்கெட்டுகளை தமிழகத்துக்கு ெகாண்டுவருவதும் வாடிக்கையாக உள்ளது. இந்த எக்ஸ்சேஞ்ச் மூலம் இருதரப்பினரும் நன்றாக காசு பார்க்கின்றனர். சுமார் 3 முதல் 5 கி.மீ. எல்லைக்குள் இந்த வியாபாரம் படுஜோராக நடக்கிறது.

இச்சட்ட விரோத செயலை கண்காணித்து தடுக்க வேண்டிய தமிழக எல்லையோர போலீசார், தங்களையும் பார்ட்னர்ஷிப் சேர்த்துக்கொண்டு, சில்லரையை அள்ளுகின்றனர். குறிப்பாக, க.க.சாவடி, ஆனைகட்டி பகுதி போலீசார் காட்டில் ஒரே மழைதான். ‘’குடி’’மகன்கள் குஷியாக இருக்கிறார்களோ, இல்லையோ, இவர்கள் படு குஷியாக உள்ளனர். க.க.சாவடி, வழுக்குப்பாறை, திருமலையம்பாளையம், காளியாபுரம், செட்டிபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் ‘’கள்’’ இறக்கி கேரளாவிற்கு விற்பனைக்காக கொண்டுசெல்கின்றனர். இதற்கும் கோவை போலீசார் பச்சைக்கொடி காட்டுவதால், டிரிபிள் ஸ்டார் அதிகாரி, டபுள் ஸ்டார் அதிகாரிகள் முதல் கடைநிலை காவலர் வரை, ஒரே வளம்தான்...!

மிடுக்கான அதிகாரிகள் அச்சம்:

நெல்லை மாநகர போலீசில் சாமியாக இருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் மிகவும் திறமையானவர் என பெயர் பெற்றவர். நெல்லையில் நடந்த முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் கொலை வழக்கில் தடயங்கள் எதுவும் சிக்காத போதிலும், ஆதாரங்களை சேகரித்து பொறி வைத்து குற்றவாளியை பிடித்தார். அதற்காக உயர் போலீஸ் அதிகாரியின் பாராட்டையும் பெற்றவர். இதேபோன்று பல்வேறு வழக்குகளை திறமையாக கையாண்டு காவல்துறை உயர் அதிகாரிகளிடம் பெயர் வாங்கினார். ஆனால் இவரது வளர்ச்சியை பிடிக்காத, அதே துறையின் உயர் அதிகாரிகள் சிலர் இவரை மாட்டி விட திட்டம் தீட்டினர்.

அதற்காக ஒரு நபரை செட்டப் செய்து அந்த போலீஸ் அதிகாரி மீது புகார் கொடுக்க வைத்தனர். சீருடைப் பணியாளர் துறையாச்சே, நடவடிக்கை எடுக்காமல் சும்மா விடுவார்களா, அந்த புகாரில் போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால் போலீஸ் அதிகாரி மீது புகார் கொடுத்த நபரே சுவற்றில் அடித்த பந்து போல புகாரை வாபஸ் வாங்கிச் சென்று விட்டார். ஆனால் போலீஸ் அதிகாரியின் நிலைமை தான் அதோகதியாகி விட்டது. அல்வா நகரில் காவல்துறையில் நேர்மையாக பணியாற்றினாலும், நமக்கு ‘ரிவிட்டு’’ தான் என்று மிடுக்கான அதிகாரிகள் அச்சப்பட தொடங்கியுள்ளனர்.

Related Stories: