கவுகாத்தி பகுதியில் தொடரும் வன்முறை: டிவி சேனல் அலுவலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குதல்

கவுகாத்தி: குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடக்கும் நிலையில்,  உலுபரியில் உள்ள டிவி சேனல் அலுவலகத்துக்குள் புகுந்து அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

குடியுரிமை சட்டம் அமல்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து வன்முறை, போராட்டம், கல்வீச்சு போன்ற சம்பவங்களால் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் 2 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் காயமடைந்தனர். இந்நிலையில், கவுகாத்தியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்ற போது, அசாம் காவல்துறையினர் தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல் அலுவலகத்திற்குள் நுழைந்து அதன் ஊழியர்களை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

முன்னதாக உலுபரி வட்டாரத்தில் உள்ள மேற்கண்ட டிவி சேனல் வளாகத்திற்குள் காவல்துறையினர் முதலில் நுழைந்து, கட்டிடத்திற்கு வெளியே அமர்ந்திருந்த சில ஊழியர்களை அடித்து உதைத்தனர். பின்னர், கட்டிடத்திற்குள் நுழைந்தபோது, ​​வரவேற்பு பகுதிக்கு அருகிலுள்ள மற்ற ஊழியர்களை அடித்து தாக்கினர். இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சுமார் 45 நிமிடங்களுக்கு முன்னர், போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துவிட்டு, அதன்பின் டிவி சேனல் அலுவலகத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த டிவி சேனல் நிர்வாக ஆசிரியர் ஸ்க்ரோல் கூறுகையில், ‘‘எந்த செய்தியும் தூண்டப்படவில்லை. அசாம் போலீசிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம்” என்றார். இதற்கிடையே மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல்களுக்கு ஒரு ஆலோசனையை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. அதில், ‘சட்டம் ஒழுங்குக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது தேச விரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் அல்லது தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும் எதையும் ஒளிபரப்ப கூடாது’ என்று சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது உலுபரி பகுதியில் செயல்பட்டு வரும் டிவி ேசனல் அலுவலகத்துக்குள் புகுந்து போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும், இதற்கு பல்வேறு அமைப்புகளும் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றன.

Related Stories: