சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் இன்று!...

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 12-ம் தேதி சர்வதேச சுகாதார பாதுகாப்பு தினம் (Universal Health Coverage Day) கடைபிடிக்கப்படுகிறது. உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் மலிவான தரமான சுகாதாரப் பராமரிப்பை வழங்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு முதன் முதலில் அறைகூவல் விடுத்த ஐக்கிய நாடுகள் அவையின் ஒரு மனதான தீர்மானம் நிறைவேறிய நாள் டிசம்பர் 12.

உலகின் எந்தப் பகுதியிலும் இருக்கும் அனைத்துக் குடிமக்களுக்கும் வருமான அளவு, சமூக நிலை, பாலினம், சாதி அல்லது மத வேறுபாடுகளின்றி சுகாதாரப் பராமரிப்பைப் பெற சமமான வாய்ப்பை உறுதி செய்வதே சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பு என்பதன் பொருள்.

மலிவான, பொறுப்பான, தகுந்த சுகாதாரச் சேவையை உறுதியான தரத்தோடு அளிப்பதே இந்த தினத்தை அனுசரிப்பதன் நோக்கம். அதில் தடுப்பு, குணப்படுத்துதல் மற்றும் புனர்வாழ்க்கைப் பராமரிப்புகள் யாவும் அடங்கியுள்ளன. ஐக்கிய நாடுகளால் தழுவப்பட்ட புதிய நிலையான வளர்ச்சி இலக்குகளில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த சுகாதார பாதுகாப்பு பின்வருமாறு இருக்க வேண்டியது அவசியம். ஏழைகள் மற்றும் மிகவும் பலவீனமானவர்கள் உட்பட்ட அனைவருக்கும் நோய்த்தடுப்பு, மருத்துவம், மருத்துவமனைப் பராமரிப்பு, வலி நிவாரணம் அனைத்தையும் உள்ளடக்கிய முழு அளவிலான இன்றியமையாத சுகாதாரச் சேவைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி வழங்கப்பட வேண்டும்.

நோயாளிகள் மட்டுமன்றி அனைத்து மக்களும் செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதாவது முன்பணமாக செலுத்துவதோ, நோய் ஆபத்தைப் பொறுத்து தொகுதிகளாகப் பிரித்தோ மருத்துவச் செலவை பகிர்ந்துகொள்ள வேண்டும். மக்களின் பணம் கொடுக்கும் திறனைப் பொறுத்து அல்லாமல், அவர்களுடைய தேவைக்கு ஏற்ப பெற்றுக் கொள்ளும் நிலை இருக்க வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி, உலக அளவில் ஏறத்தாழ 100 கோடி மக்களால் தங்களுக்குத்  தேவைப்படும் சுகாதார சேவைகளைப் பெற முடிவதில்லை. மருத்துவச் செலவுகளினால் ஆண்டுதோறும் 1.50 கோடி பேர் வரை பொருளாதார நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். 1 கோடி பேர் வரை வறுமைக்கோட்டிற்குக் கீழாக உள்ளனர்.

2012 முதல் 2017 வரையிலான 12-வது திட்டக் காலத்தில் நாட்டில் உள்ள அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பை வழங்க இந்தியா உறுதி எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. திட்டக் குழுவால் உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பிற்காக ஒரு  மேனிலை வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பொருளியல் பாதுகாப்பே இந்த முன்முயற்சியின் முக்கிய நோக்கமாக இருந்தாலும், உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை வழங்க போதுமான சுகாதாரப் பராமரிப்பு கட்டுமானமும், பயிற்சி பெற்ற  பணிக்குழுவும், மலிவான மருந்துகளையும் தொழில்நுட்பத்தையும் அனைவருக்கும் கிடைக்கச் செய்வது மிகவும் அவசியம்.   

நீண்ட கால பொருளாதார மேம்பாட்டுக்குச் சிறந்த ஆரோக்கியமே அடிப்படை. உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பைத் தழுவிக்கொள்ளும் நாடுகளுக்கு ஆரோக்கியமான சமுதாயம் மற்றும் வலிமையான பொருளாதாரம் என்கிற இருவித நன்மைகள் கிடைக்கின்றன.

சர்வதேச சுகாதாரப் பாதுகாப்பானது 1948-ம் ஆண்டின் உலக சுகாதார நிறுவன அமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. அதில் சுகாதாரம் அனைவரின் அடைப்படை உரிமை என்பதும், எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: