இசைக் கிராமம்!

நன்றி குங்குமம் தோழி

சீனாவில் மத்திய சிடாங்கவ் கிராமத்தில் உள்ளது டியான்ஜிங் என்ற சின்ன கிராமம். இந்த கிராமத்தை பற்றி பலருக்கு தெரியாது. ஆனால் இந்த கிராமத்தின் ஓர் ஆண்டு வருமானம் 500 கோடி ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா! அது தான் உண்மை.இந்த கிராமத்தில் மொத்த மக்களின் தொகை 5000 பேர் தான். இவர்களின் தொழிலே சாக்சஃபோன் இசைக் கருவியை தயாரிப்பது தான். இந்த கிராமத்தை சாக்சஃபோன் கிராமம் என்றும் அழைக்கிறார்கள்.

கடந்த 40 வருடங்களாக சாக்சஃபோன் இசைக் கருவியினை தயாரித்து வரும் இவர்கள் அதை தயாரிப்பது மட்டும் இல்லாமல் அந்த கருவி சார்ந்த அனைத்து வேலைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகிறார்கள். அதாவது கருவியின் சின்ன சின்ன உபகரணங்கள் தயாரிப்பது முதல், அதனை பாலிஷ் செய்வது, எலக்ட்ரோபிளேட்டிங், ஒன்றிணைப்பது என அனைத்து வேலைகளிலும் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். இதனால் அந்த கிராமம் மட்டும் இல்லாமல் அருகில் இருக்கும் சின்ன சின்ன கிராமங்களும் பொருளாதார முறையில் வளர்ச்சியை அடைந்து வருகிறது.

இங்கு ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் சாக்சஃபோன் இசைக்கருவிகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் சீனாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணியாக விளங்குகிறது டியான்ஜிங் கிராமம். சாக்சஃபோன் மட்டுமின்றி மேற்கத்திய இசைக்கருவிகளான கிளாரினெட், ஊது கொம்பு... சீன கருவிகளில் ரீட் பைப், மூங்கில் புல்லாங்குழல், டிரம்பட்ஸ், டியுபாஸ் மற்றும் ஓபோயிஸ் போன்ற இசைக் கருவிகளையும் உற்பத்தி செய்யும் பணியில் இந்த கிராமம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இது போன்ற இசைக் கருவிகளை உருவாக்கவே இங்கு 70க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தேவையான இசைக்கருவிகளில் பாதி அளவுக்கு மேல் இந்த கிராமத்தில் தான் உருவாக்கப்பட்டு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது. இது தான் இவர்களின் வாழ்வாதாரம் என்பதால், இந்த பணியில் ஆண், பெண் என இருபாலரும் வேலைப் பார்த்து வருகின்றனர். ேமலும் கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு சாக்சஃபோன் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்று தெரிந்திருக்கும்.

1840ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த கருவியினை முழுவதும் இயந்திரத்தால் உருவாக்க முடியாது. அதன் பெரும்பாலும் பகுதியினை கைகளால் தான் அமைக்க முடியும். சந்தையின் மாறுபட்ட கோரிக்கைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு சாக்சஃபோன் கருவி உற்பத்தித் துறையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்று கிராமத்தில் உள்ள இசைக்கருவி நிறுவனங்கள் ஆராய்ந்து வருகின்றன.

கோமதி பாஸ்கரன்

Related Stories:

>