நாடாளுமன்ற துளிகள்

இ-சிகரெட் தடைமசோதா அறிமுகம்

மக்களவையில் நேற்று இ சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, மற்றும் விற்பனைக்கு தடைவிதிக்கும் வகையிலான மசோதா 2019 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்தார். கடந்த செப்டம்பர் 18ம் தேதி அமல்படுத்தப்பட்ட அவசரச் சட்டத்திற்கு பதிலாக இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் இ சிகரெட்டை தயாரித்தல், விற்பனை செய்தல், இறக்குமதி செய்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் சிறை தண்டனை மற்றும் அபராதம் செலுத்த நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிமீறலில் முதல்முறையாக ஈடுபடும் நபர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபாரதம் விதிக்கவும், தொடர்ந்து இ சிகரெட் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் செலுத்த நேரிடும். இ சிகரெட்டை பதுக்கி வைத்தால் 6 மாதம் சிறை மற்றும் ரூ.50000 அபாராம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே தனியார்மயம் இல்லை

மாநிலங்களவை கேள்வி நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அளித்த பதிலில் கூறியதாவது: ரயில் பயணிகளுக்கு சிறப்பான சேவை அளிப்பதுதான் எங்கள் நோக்கம். ரயில்வேயை தனியார் மயமாக்குவது அல்ல. இந்திய ரயில்வே தொடர்ந்து இந்தியா மற்றும் மக்களின் சொத்தாகத்தான் இருக்கும். ஒவ்வொரு நாளும், சிறப்பான சேவைகள் மற்றும் புதிய வழித்தடங்கள் கேட்டு எம்.பி.க்கள் வருகின்றனர். அடுத்த 12 ஆண்டுகளுக்கு, புதிய ரயில்கள், புதிய சேவைகள் வழங்க, ரயில்வே துறைக்கு ரூ.50 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இவ்வளவு தொகையை அரசால் வழங்க வாய்ப்பில்லை. இதில் முதலீடு செய்ய தனியார் நிறுவனங்கள் முன்வந்தால், பயணிகள் பயன் அடைவர். ரயில்வே துறையை அரசு,  வர்த்தக மயமாக்குகிறது.  

தனியார் மயமாக்கவில்லை. வர்த்தக தொடர்பான பணிகள், ரயிலுக்குள் வழங்கப்படும் சேவைகள் மட்டுமே தனியாரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. உரிமை எப்போதும் ரயில்வே துறையிடம்தான் இருக்கும். சேவைகள் அளிக்கும் நிறுவனங்களுக்கு நாங்கள் உரிமம் மட்டுமே வழங்குகிறோம். இதனால் ரயில்வேயில் உள்ள தற்போதைய ஊழியர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படமாட்டார்கள். தனியார் நிறுவனங்கள் சிறப்பான சேவைகளை அளிக்கும். அதன் மூலம் கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்டிஐ மனுக்களை அதிகம் நிராகரித்த 2 அமைச்சகங்கள்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களில் அதிகளவு மனுக்களை நிராகரித்த துறைகள் குறித்த பட்டியலை மத்திய தகவல் ஆணையம் தனது ஆண்டறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த வார தொடக்கத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து பணியாளர் நலத்துறை அமைச்சகம் சார்பில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் `கடந்த 2018-19ம் ஆண்டில் மொத்தம் பெறப்பட்ட 13.70 லட்சம் ஆர்டிஐ மனுக்களில் 64,334 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில் அதிகளவாக 26.54 சதவீதம் அளவுக்கு மனுக்களை பழங்குடியினர் விவகாரத் துறையும், உள்துறை அமைச்சகம் 16.41 சதவீதம் மனுக்களையும் நிராகரித்துள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு 600 கோடி நிதி

மகாராஷ்டிரா மாநில மழை பாதிப்பு தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய விவசாயத் துறை இணையமைச்சர் புருசோத்தம் ரூபாலா அளித்த பதிலில், ‘‘மகாராஷ்டிராவில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த மழையால் காரிப் பருவ பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதேபோல், வேறு சில மாநிலங்களிலும் மழை பாதிப்பு இருந்தது. மகாராஷ்டிரா மாநில அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று நிபுணர்கள் குழுவை அங்கு அனுப்பி ஆய்வு செய்தோம். இதன் அடிப்படையில் விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் அந்த மாநிலத்திற்கு ரூ.600 கோடி இடைக்கால நிவாரணமாக அறிவிக்கப்படுகிறது. சேதம் குறித்து முழு அறிக்கை கிடைத்ததும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: