குஜராத்தில் சிறுமிகள் கடத்தல் விவகாரம்: போலீசாருக்கு ஒத்துழைக்க மறுத்ததால் நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேர் கைது

காந்திநகர்: குஜராத்தில்  நித்தியானந்தா ஆசிரம நிர்வாகிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் தலைமை நிர்வாகியான  பிரியாதத்வா, பிரான்ப்ரியா ஆகிய இரண்டு நிர்வாகிகளை அகமதாபாத் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பெங்களூரு சேர்ந்தவர்கள் ஜனார்த்தன் சர்மா, இவரது மனைவி உமேஷ்வரி. இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். நித்தியானந்தாவிடம் தனி செயலாளராக இருந்த ஜனார்தன் சர்மா பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்று வந்தபோது, குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது, சேவை செய்வதற்காக ஜனார்த்தனின் மகள்களும், மகனும் நித்தியானந்தா ஆசிரமத்திலேயே தங்கி விட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் ஜனார்த்தன் சென்று அழைத்துபோது, 3 பிள்ளைகளும் வீட்டுக்கு வர மறுத்துவிட்டனர். மேலும், ஆசிரமத்தில் இருந்தவர்கள் இவர்களை விரட்டி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஜனார்த்தனின் மகள்களும், மகனும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான ஆசிரமத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தன்னுடைய குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்த ஆசிரமத்துக்கும் சென்று ஜனார்த்தன் கேட்டபோது, அவரை ஆசிரமத்தில் இருந்தவர்கள் எதுவும் சொல்லாமல் விரட்டியடித்து விட்டனர்.  இதையடுத்து, அவர் கடந்த 2ம் தேதி குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் புகார் அளித்தார். அவர்கள் போலீசாருடன் சென்று, நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த அவரது ஒரு மகளையும், மகனையும் மீட்கப்பட்டனர். மேலும் தன்னுடைய 2 மகள்களை மீட்பதற்காக அவர் அகமதாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து அகமதாபாத் போலீசார் நித்தியந்தா ஆசிரமத்திற்கு சென்று மகள்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அச்சமயம் அவர்களை ஆசிரமத்திற்குள் வர விடாமல் தடுத்து நிறுத்தி அங்குள்ள நிர்வாகிகள் காவல்துறையிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து, அகமதாபாத் போலீசார் அதிரடியாக இரண்டு நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். அவர்கள் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தன்னுடைய 2 மகள்களையும் மீட்க வேண்டும் என்று ஜனத்தன் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார். அதன் அடிப்படியில் ஆசிரம நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>