தென்பெண்ணையாறு விவகாரம் அதிமுக அரசை கண்டித்து 21ல் 5 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்: திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள அணை உள்ளிட்ட 5 திட்ட பணிகளுக்கு தடை விதிப்பதற்கு எந்த காரணமும் சொல்லப்படவில்லை என்ற ரீதியில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையிலும், எதிர்க்கட்சி துணை தலைவரின் அறிக்கைக்குகூட பொதுப்பணி துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்லவில்லை. சம்பந்தமில்லாத துறையின் அமைச்சர் ஜெயக்குமாரை விட்டு, சட்ட தோல்விக்கும், வழக்கை அலட்சியமாக நடத்தியதற்கும், அரைவேக்காட்டு தனமாக அறிக்கை விட வைத்திருக்கிறார்.

 இது அதிமுக அரசு 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் ஜீவாதார பிரச்னைகளில் விபரீத விளையாட்டை நடத்துவதையே தன் வாடிக்கையாக கொண்டிருக்கிறது என்பது மேலும் நிரூபணமாகிறது. தமிழக உரிமையை பாதிக்கும் தென் பெண்ணையாற்று திட்டங்களை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள அதிமுக அரசை கண்டித்து திமுக சார்பில் வரும் 21ம் தேதி (வியாழக்கிழமை), கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.ஆர்ப்பாட்டத்தில் கிளை, ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: