இன்று (நவ.13) உலக கருணை தினம் : கருணை உள்ளத்தில் கடவுளை காண்போம்

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என்றார் அறிஞர் அண்ணா. பொருளாதாரம் மற்றும் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டோருக்கு உதவுபவர்கள் மூலமாக நாம் கடவுளை காணலாம். அதற்கு கருணை கொண்ட மனம் தேவை. இந்த மனம் அனைவருக்கும் கட்டாயம் வேண்டும் என்பதை உணர்த்துவதற்காகத்தான் ஆண்டுதோறும் நவம்பர் 13ம் தேதியை உலக கருணை தினமாக கொண்டாடி வருகிறோம்.லூயிஸ் பர்பிட் - டன்ஸ் மற்றும் டேவிட் ஜாமிலி என்ற இரண்டு மனித நேய உறுப்பினர்கள்தான் முதன்முதலாக கருணை இயக்கத்தை ஆரம்பித்தனர்.

அவர்களுடைய நோக்கம் நாடு முழுவதும் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே. முதியவர்கள் சாலையை கடக்க உதவி செய்தல், பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டு மனமிரங்கி உதவுதல் போன்றவை இதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. கருணை குணம் என்றாலே நம் முன் அன்னை தெரசா வந்து செல்வார். அவரின் அந்த உள்ளமே பலரை இரக்க குணம் கொண்டவர்களாக மாற்றியது என்றால் அது மிகையல்ல. 1910, ஆக.27ம் தேதி யூகோஸ்லாவியாவில் பிறந்தவர் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு. பின்னர் கன்னியாஸ்திரியாக மாறிய இவர், சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக் கொண்டு சமூக சேவையிலும் களமிறங்கினார். 1929, ஜன.6ம் தேதி தனது 19வது வயதில் கல்கத்தாவில் தனது கருணைக்காலடியை எடுத்து வைத்தார். ஆம்... அவர்தான் அன்னை தெரசா.

கல்கத்தா வீதிகளில் கவலையோடு திரிந்த பலரின் வாழ்க்கை முறை, அன்னை தெரசாவின் ஆழ்மனதில் ஆறாத வடுக்களாய் இருந்தன. இவர்களுக்காக வாழ வேண்டுமென உறுதி கொண்டார். கல்கத்தாவில் ஏழைகளின் வாழ்விடமாக கருதப்படும் மோட்டிஜில் பகுதிக்கு 1948, டிச.21ம் தேதி சென்றார். கையில் இருப்பதோ 5 ரூபாய்... ஆனால், உதவும் மனதை கோடிக்கணக்கில் விரிவுப்படுத்தினார் அன்னை தெரசா. ஆம்... 1950ல் ‘மிஷனரீஸ் ஆப் சாரிட்டி’ Missionaries of Charity) என்ற அமைப்பை உருவாக்கினார். பின்னர் 1952ல் ‘நிர்மல் ஹிருதய்’ என்ற கருணை இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் பேர் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

1953ல் ஆதரவற்றோர் இல்லம், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கினார். இதன்மூலம் பெற்றவர்கள் கூட ஒதுக்கித்தள்ளும் தொழுநோயாளிகளை அரவணைத்து, அவர்களுக்கு மருத்துவ உதவிகள், உணவு உள்ளிட்டவைகளை வழங்கி பாதுகாத்தார். வெறும் 12 பேருடன் துவங்கிய Missionaries of Charity அமைப்பு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.அன்னை தெரசாவை போல பலர் தெரிந்தும், தெரியாமலும் உதவிக்கொண்டுதான் இருக்கின்றனர்.

சென்னை, டெல்டா மாவட்டங்களில் கனமழை, வெள்ளம், புயலால் பாதிக்கப்பட்டபோது, வலைத்தளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் களத்தில் இறங்கி, பல்லாயிரக்கணக்கானோர் சமூக சேவைகளில் இறங்கியதை மறக்க முடியுமா? நம் மனது இன்னும் இரக்க ஈரத்துடன்தான் இருக்கிறது என்பதை இதுபோன்ற செயல்களே நிரூபிக்கின்றன. எனவே, பிறருக்கு கொடுத்து உதவுவோம். மற்றவர்களின் மனக்காயத்திற்கு கருணை மருந்து கொடுத்து காப்போம்.

Related Stories: