தகவல் உரிமை சட்டத்தில் தலைமை நீதிபதி வருவாரா?... உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: ‘தகவல் உரிமை சட்டத்தின் கீழ் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் வருவார்,’ என டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று அளிக்கிறது. ‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் வருவார்,’ என கடந்த 2010, ஜனவரி 10ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், ‘நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு போதும் நீதிபதியின் தனியுரிமையை பாதிக்காது,’ என்று கூறப்பட்டது. இந்த தீர்ப்புக்கு அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பால கிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்ற பதிவாளர், அதன் மத்திய பொது தகவல் துறை அதிகாரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ரமணா, சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் 4ம் தேதி இதன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: