மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்க தியேட்டர், ஷாப்பிங் மால்களில் சார்ஜிங் பாயின்ட்: சென்னை உள்ளிட்ட இடங்களில் அமைப்பு

* போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டம்

சிறப்பு செய்தி

தமிழகத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், தனியார் நிறுவனங்களில் ‘சார்ஜிங் பாயின்ட்’களை அமைக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.  

இந்தியா முழுவதும் ஏராளமான பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதுவும் சுற்றுச்சூழல் மாசுக்கு ஒரு காரணம். இதில், தமிழகத்தில் மட்டும் 2.70 கோடிக்கும் மேலான வாகனங்கள் உள்ளன. இதனால் வெப்பமயமாகுதல், சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு ஏதுவாக, “தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2019” தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டது.

இதில், அனைத்து மின்சார இருசக்கர வாகனங்கள், சீருந்துகள்,  மூன்று சக்கர வாகனங்கள், பேருந்துகள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் ஆகியவற்றிற்கு 100 சதவிகித மோட்டார் வாகன வரி விலக்கு வழங்கப்படும்.  இந்த வரி விலக்கு, 2022ம் ஆண்டு இறுதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  குறிப்பாக தென் மாவட்டங்களில் செய்யப்படும் இவ்வகை முதலீடுகளுக்கு, நிலத்தின் மதிப்பில் 50 சதம் மானியமாக வழங்கப்படும்.  இந்த சலுகை    2022ம் ஆண்டு வரை செய்யப்படும் முதலீடுகளுக்கு பொருந்தும்.  இதுபோல் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வாகனங்களை அதிகப்படியான மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றால், போதுமான அளவு சார்ஜிங் பாயின்ட்கள் அமைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்துத்துறையும், மின்சார வாரியமும் இணைந்து செய்து வருகிறது. தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள பெரிய ஷாப்பிங் மால், தியேட்டர்களில் இவற்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  

இதுகுறித்து, போக்குவரத்துத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மின்சார கார்களை பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்கு சார்ஜிங் பாயின்ட்கள் தேவை. தற்போது பெட்ரோல், டீசல் வாகனங்களின் வசதிக்காக ஆங்காங்கு பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளது போல், இதை செய்ய வேண்டும். இந்த பாயின்ட்களை எங்கு ஏற்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்தோம். அதன்படி தியேட்டர், ஷாப்பிங் மால்கள், தனியார் நிறுவனங்களில் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு செல்வோர், அங்குள்ள பார்க்கிங் ஏரியாவில் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு செல்வார்கள். நீண்ட நேரம் கழித்தே பிறகு வருவார்கள். அந்த இடைப்பட்ட நேரத்தில் வாகனங்களை, இந்த சார்ஜிங் பாயின்ட்கள் மூலம் சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதேபோல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்கு காலையில் வருவோர், மீண்டும் இரவுதான் வீட்டிற்கு செல்வார்கள். அந்த இடைப்பட்ட நேரத்தில் எளிதாக சார்ஜ் செய்து கொள்ள முடியும். தற்போது எந்தெந்த இடங்களில் அமைக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்துள்ளோம். தொடர்ந்து, இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.  இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பணிமனைகளிலும்..

அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பிலும் மின்சாரப் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதற்காக பணிமனைகளில் சார்ஜிங் பாயின்ட்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், மின்வாரிய அதிகாரிகளும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: