ராமேஸ்வரம் பாம்பனில் ரூ.250 கோடியில் புதிய ரயில்வே பாலப் பணிகள் இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பனில் புதிய ரயில்வே பாலம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்று இன்று முதல் பணிகள் துவங்கப்பட உள்ளன. மண்டபம் நிலப்பகுதியையும் ராமேஸ்வரம் தீவு பகுதியையும் இணைக்கும் விதமாக கடந்த 1914ம் ஆண்டு பாம்பன் கடல் நடுவே சுமார் 2 கி.மீ தூரத்திற்கு ரயில் பாலம் அமைக்கப்பட்டது. இந்த பாலம் சுமார் 105 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. பாம்பன் ரயில்பலத்தின் மையத்தில் உள்ள தூக்குப்பாலம் கடல் உப்புக்காற்று காரணமாக துருப்பிடித்து சேதம் அடைந்தது. இதனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராமேஸ்வரத்திற்கு வரவேண்டிய அனைத்து ரயில்களும் மண்டபத்திலேயே நிறுத்தப்பட்டது. பாம்பன் பலத்தை கப்பல்கள் கடந்து செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது. இந்த பாலம் தற்போது வலுவாக இருந்தாலும் இந்திய ரயில்வே சார்பில் புதிய ரயில் பாலம் கட்டுவதற்கு 2018ம் ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிக்காக ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த நிதியினை பாராளுமன்ற தேர்தலின் போது தமிழகம் வந்திருந்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி திறந்து வைத்தார். இதையடுத்து, புதிய பாம்பன் பாலம் அமைக்க சென்னை ஐஐடி மாணவர்கள் மற்றும் ரயில்வே பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். புதிய பாலம் அமைக்கும் பணிக்காக சென்னையில் இருந்து ரயில்வே அதிகாரிகள் பாம்பன் ரயில் பாலத்தை ஆய்வு செய்தனர். தனியார் ஒப்பந்ததாரர்களும் கடந்த 6 மாத காலமாக தங்களது சர்வே பணியினை நடத்தி வந்தனர். இதையடுத்து, இன்று காலை 10 மணியளவில் அடிக்கல் நாட்டி, பூமி பூஜையானது நடைபெற்றது. இந்த பூஜையின் போது இந்திய ரயில்வேயின் ஆய்வு குழுவினர் மற்றும் முதன்மை பொறியாளரும், தனியார் கட்டுமான அதிகாரிகளும் பூஜையில் கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து பாலம் கட்டும் பணிகள் தொடங்கியது. மேலும் 2 ஆண்டுகளுக்குள் புதிய பாலம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: