திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் வெளிநாட்டு கைதிகள் 20 பேர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் பரபரப்பு!

திருச்சி: திருச்சி மத்திய சிறையில் உள்ள அகதிகள் முகாமில் வெளிநாட்டு கைதிகள் 20 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இந்திய அரசின் அனுமதி இல்லாமல் இந்தியாவில் தங்கியிருந்தது, போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முயன்றது, போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் கைது செய்யப்பட்ட 70 வெளிநாட்டினர், திருச்சியில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இலங்கை தமிழர்கள், வங்க தேசத்தினர், பல்கேரியா, சீனா நாடுகளைச் சேர்ந்த 46 அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக தங்களை கைது செய்து முகாமில் அடைத்து வைத்து இருப்பதாகவும், வழக்கில் ஜாமீன் கிடைத்தும் வெளியே விட மறுப்பதாகவும், அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினார்கள்.

அதுமட்டுமல்லாது, போதுமான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும் இவர்கள் குற்றம்சாட்டினர். அவர்களுக்கு வழங்கப்பட்ட மதியம் மற்றும் இரவு உணவை சாப்பிட மறுத்தனர். அதிகாரிகள் அவர்களிடம் சமரசம் பேசினர். ஆனாலும் கைதிகள் போராட்டம் விடிய விடிய நடந்தது. இன்று காலையிலும் போராட்டம் நீடித்தது. இந்நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் 20 கைதிகள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது. அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு வாந்தி எடுத்ததால் உடனடியாக அங்குள்ள முகாம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிறைக்கைதிகள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், முகாமில் கைதிகளுக்கு வி‌ஷம் எப்படி கிடைத்தது, அவர்கள் எந்த வகையான வி‌ஷம் சாப்பிட்டனர் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: