எந்த அடிப்படையில் தனிநபரின் அலைபேசியை அவருக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்க அனுமதி வழங்கப்பட்டது: உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: எந்த அடிப்படையில் தனிநபரின் அலைபேசியை அவருக்கே தெரியாமல் ஒட்டுக்கேட்க அனுமதி வழங்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சத்தீஸ்கர் மாநில அதிகாரியின் அலைபேசியை ஒட்டுக்கேட்க மாநில அரசு அனுமதி வழங்கிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நிறைய கேள்விகளை எழுப்பியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த முகேஷ் குப்தா, ஊழல் வழக்கு ஒன்றில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஓராண்டுக்கு மேலாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும், அவரது அலைபேசியை மாநில அரசு சட்டவிரோதமாக ஒட்டுக்கேட்டதாகவும் கூறி கடந்த மாதம் முகேஷ் குத்பா ஐ.பி.எஸ் அதிகாரி சார்பில் மனு ஒன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஒப்புக்கொண்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி அருணமிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அதில், முகேஷ் குப்தா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி வழக்கு தொடர்பாக தனது வாதங்களை முன்வைத்தார். அப்போது, உச்சநீதிமன்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. நாட்டில் என்ன நடக்கிறது? தனிநபர் அந்தரங்கம் என்பது கிடையாதா?, சிலரின் தனிநபர் உரிமை இப்படி தான் மீறப்படுகிறதா? உள்ளிட்ட கேள்விகளை சரமாரியாக முன்வைத்தது. குறிப்பாக தனிநபரின் அலைபேசியை ஒட்டுக்கேட்டது எந்த அரசு?, எப்படி அனுமதி அளிக்கலாம் ? உள்ளிட்ட கேள்விகளையும் நீதிபதிகள் எழுப்பினர்.

தொடர்ந்து, ஐபிஎஸ் அதிகாரியின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டது யார், என்ன காரணத்திற்காக உத்தரவிடப்பட்டது? என்பது குறித்து விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய சத்தீஸ்கர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி மீது போடப்பட்ட எப்ஐஆர் தொடர்பாக நடவடிக்கை எடுக்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் பெயரால் இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மானிக்கும் நீதிபதிகள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

Related Stories: