ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ சீராய்வு மனு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று சீராய்வு மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவரை சிபிஐ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். பின்னர் சிறப்பு நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரம் நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் மேற்கண்ட வழக்கில் சிபிஐ கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிபிஐ சிறப்பு  நீதிமன்றம்  மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் ஆகியவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தன. இதையடுத்து ஜாமீன் கேட்டு ப.சிதம்பரம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை மூன்று நீதிபதிகள் அமர்வு  விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பானுமதி, போபன்னா மற்றும் ஹரிசிக்கேஷ் ராய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் சிபிஐ தொடர்ந்த வழக்கில்  ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கடந்த 22ம் தேதி உத்தரவிட்டனர். இருப்பினும் வெளியில் வர முடியாத சூழலில் இருக்கும் ப.சிதம்பரம் தற்போது அமலாக்கத்துறை தரப்பு காவல் விசாரணையில் உள்ளார். இந்த நிலையில் சிபிஐ  சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிபந்தனை ஜாமீனை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில்  வழக்கு தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதால் அவர் வெளியே சென்றால் சாட்சியங்களை கலைக்கக்கூடும். அதனால் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும்  என தெரிகிறது.

Related Stories: