நேபாளம், பாகிஸ்தானை விட பின்தங்கியது உலக பட்டினி குறியீட்டில் 102வது இடத்தில் இந்தியா

புதுடெல்லி : உலக பட்டினிக் குறியீடு பட்டியலில் இடம் பெற்றுள்ள 117  நாடுகளில், இந்தியா 102வது இடத்தை பிடித்துள்ளது. ஜெர்மனியை  சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்பி’, ஐரிஷ் நாட்டை சேர்ந்த `கன்செர்ன்  வேல்ர்டுவைட்’ அறக்கட்டளை அமைப்புகள் இணைந்து, நான்கு முக்கியக் காரணிகளின்  அடிப்படையில் சர்வதேச பட்டினி குறியீடு பட்டியலை தயாரிக்கிறது. முதலாவதாக, ஒரு குழந்தைக்கு தேவையான சத்துள்ள சரிவிகித உணவு கிடைக்கிறதா,  இரண்டாவது, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உயரத்துக்கு  ஏற்ற எடை உள்ளனரா, 3வது, 5 வயதுக்கு கீழ் உள்ள  குழந்தைகள் வயதுக்கேற்ற உயரம் உள்ளனரா, 4வதாக குழந்தைகள் இறப்பு விகிதம்  ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில், சர்வதேச  உணவு தினத்தை முன்னிட்டு, உலக பட்டினிக் குறியீடு பட்டியல் நேற்று   வெளியிடப்பட்டது. கடந்தாண்டு 103வது இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம்  பின்தங்கி, இந்த ஆண்டு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட 117 நாடுகளில்,  102வது இடத்தை பிடித்துள்ளது.

அண்டை நாடுகளான இலங்கை 66, மியான்மர்  69, நேபாளம் 73, வங்கதேசம் 88, பாகிஸ்தான் 94, சீனா 25வது இடத்தை பிடித்து இந்தியாவை விட மிகவும் முன்னிலை பெற்றுள்ளன. இவற்றில் சீனா மிக குறைந்த  தீவிரப் பிரிவுக்கும், இலங்கை மிதமான தீவிரப் பிரிவுக்கும் முன்னேறியுள்ளன.  பருவநிலை மாற்றத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் ஏமன், ஜிபவுட்டி  உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை விட பல இடங்கள் முன்னிலையில் உள்ளன.கடந்த  2000ம் ஆண்டில் 113 நாடுகளின் பட்டியலில் 83 இடத்தில் இருந்த இந்தியா  இந்தாண்டு 102வது இடத்துக்கு பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதே போன்று, கடந்த  2005ல் 38.9 புள்ளிகளுடன் இருந்த இந்தியாவின் நிலை, 2010-2019ம் ஆண்டுகளில் 32 முதல்  30.3 புள்ளிகளை மட்டுமே பெற்று பின் தங்கியுள்ளது.

சைல்ட் வேஸ்டிங்’

பட்டினி குறியீடு பட்டியலில், `சைல்ட் வேஸ்டிங்’ எனப்படும், உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை கடந்த 2008-12ம்  ஆண்டுகளில் 16.5 சதவீதமாக இருந்த நிலையில், 2014-18ல் 20.8 சதவீதமாக  அதிகரித்துள்ளது. இது பட்டியலில் இடம் பெற்றுள்ள, வேறெந்த நாட்டிலும்  இல்லாத அளவு இந்தியாவில் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது. மேலும், 6-23  மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளில் 9.6 சதவீதத்தினருக்கு மட்டுமே சராசரி  உணவு கிடைக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: