இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேச துரோக வழக்குப்பதிவு: அரசுக்கு சம்பந்தமில்லை...மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

லக்னோ: இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கில் அரசுக்கு சம்பந்தமில்லை என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபான்மையினர்  மீதான வன்முறை தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இயக்குநர் மணிரத்னம் உட்பட 50 பிரபலங்கள், கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பீகார்  நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூர்யகாந்த் திவாரி, இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து இயக்குனர் மணிரத்னம் உள்பட 49  பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக அறிவிக்கப்பட்டது.

வரலாற்று ஆய்வாளர் ராம் குகன், இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி போன்ற சமூக அக்கறை உள்ள கலைஞர்களை தேசத் துரோகிகள் என்று சொல்வதை விடப் பேரபாயம் வேறு எதுவும் இல்லை!சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள்,  ஜனநாயகத்தின் முன்பு படுதோல்வி அடைந்ததுதான் இதுவரை வரலாறு என தனது டுவிட்டர் பக்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தது கேலிக் கூத்தானது என  விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் விமர்சித்துள்ளார். பிரபலங்கள் மீதான வழக்கு, கருத்து சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என காங்கிரஸை சேர்ந்த மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் குற்றஞ்சாட்டியுள்ளார்.  திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தேசத்தை நேசிப்பவர்கள் பிரதமரையும் மதிப்பால்தான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளனர் என்றும், இது எப்படி தேசத்துரோகமாகும்? எனவும் வினவியுள்ளார்.  

இந்நிலையில், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், 49 பிரபலங்களுக்கு எதிராக மத்திய அரசு எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை எனவும், தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற  அறிவுறுத்தலின்படியே, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், மும்பையின் ஆரே காலனி பகுதியில் மரங்கள் வெட்டப்படுவது குறித்தும் விளக்கம் அளித்தார். மரங்களை நட வேண்டும் என கோர்ட்  எங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லி  மெட்ரோ பணிகளின் போதும் ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டன. அப்போதும் பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராடினர்.

ஆனால் பின்னர், வெட்டப்பட்ட மரங்களுக்கு சமமான மரங்கள் நடப்பட்டன. அதனால் எங்களுக்கு பொறுப்பு உள்ளது.  அரசு என்ன செய்ய போகிறது என்பது பொறுமையாக பாருங்கள். சுற்றுச்சூழல் பிரச்னைகளும் கவனத்தில் கொள்ளப்படும்.  இது வனப்பகுதி அல்ல என ஐகோர்ட் தெளிவாக கூறி விட்டது. டில்லியில் 271 மெட்ரோ ரயில் நிலையங்கள்  கட்டப்பட்டுள்ளன. வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் நடப்பட்டதால் வளர்ச்சியுடன், இயற்கையும் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: